தேடுதல்

உலகையே வாழவைக்கும் தண்ணீர் உலகையே வாழவைக்கும் தண்ணீர்  

இனியது இயற்கை: ஒரு சொட்டு தண்ணீரில் பல கோடி மூலக்கூறுகள்

இந்தப் பூமியில் தண்ணீரைப் பற்றி தெரியாத மனிதரே இருக்க முடியாது. அதே தண்ணீரின் மர்மங்கள் எல்லாம் தெரிந்த மனிதரும் இருக்க முடியாது”

மேரி தெரேசா: வத்திக்கான்

நிலம், நீர், காற்று, வானம் என, இறைவனின் படைப்புக்கள் ஒவ்வொன்றும், அவற்றில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும், நம்மை வியப்பின் உச்சிக்கே இட்டுச்செல்கின்றன. நிறமற்றும், சுவையற்றும் உள்ள நீர் பற்றி அறிய அறிய, அதன் பண்புகள் நம்மை அசரவைக்கின்றன. அதைவிட அதன் மூலக்கூறுகளை அறிந்துகொள்வது மிகவும் கடினம். ஒரு சொட்டு தண்ணீரில் பல கோடி மூலக்கூறுகள் உள்ளன. அதனால்தான், இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் அறிவியல் எழுத்தாளர் டாக்டர் ஜான் எம்ஸ்லி அவர்கள், “தண்ணீர் மூலக்கூறைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சி செய்தாயிற்று. ஆனாலும் அதைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை” என்று, தண்ணீரைப் பற்றி கூறுகிறார். நியூ சயன்டிஸ்ட் (New Scientist) என்ற வார இதழ், “இந்தப் பூமியில் தண்ணீரைப் பற்றி தெரியாத மனிதரே இருக்க முடியாது. அதே தண்ணீரின் மர்மங்கள் எல்லாம் தெரிந்த மனிதரும் இருக்க முடியாது” என்று கூறியுள்ளது. தெரியாதவை தெரிவிக்கும் உண்மைகள் என்ற நூலில் தண்ணீரின் தன்னிகரற்ற தன்மை பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. “தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தண்ணீர்காட்டுகிறது. H2O என்றாலே அது வாயுவாக இருக்க வேண்டும். ஆனால் நீர்மமாக உள்ளது. அது உறைந்து, பனிக்கட்டி என்ற திடநிலையை அடைகிறபோது, தண்ணீரில் மூழ்குவதற்கு பதில் அது மிதக்கிறது” என்று, டாக்டர் எம்ஸ்லி அவர்கள் எளிய மூலக்கூறை உடைய தண்ணீரைப் பற்றி வியந்து கூறியுள்ளார். அமெரிக்க அறிவியல் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் பால் ஈ. கலாப்ஸ்டெக், தண்ணீரின் தன்னிகரற்ற தன்மையைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார். “தண்ணீர் உறைந்ததும் மேலே மிதப்பதால் அடியில் இருக்கும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடிகிறது. தண்ணீர் உறைந்ததும் மிதக்கவில்லை என்றால் மெல்ல மெல்ல ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் பனிக்கட்டியாக மாறி, நீர்வாழ் உயிரினங்களை எல்லாம் கொன்றுவிடும்.” ஆகவே “காரண காரியங்களை சிந்திக்கக்கூடிய அபார அறிவுபடைத்த படைப்பாளரே இந்தப் பிரபஞ்சத்தை படைத்திருக்க வேண்டும் என்பதற்கு” தண்ணீரின் தன்னிகரற்ற தன்மையே சான்று என்றும் டாக்டர் கலாப்ஸ்டெக் அவர்கள் கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2022, 15:05