இனியது இயற்கை - நிறைவாக வாழ நிலத்தடி நீரைக் காப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடுத்த அடிப்படை நீர் வளமாக அமைவது நிலத்தடி நீர். நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் மிகப் பெரிய நாடு இந்தியாதான். குறிப்பாக, கிராமங்கள், மற்றும் குக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு நிலத்தடி நீர்தான் வாழ்வாதாரம். அவர்கள் பல நேரங்களில் நிலத்தடி நீரைக் கட்டுப்பாடின்றி விரயமாக்கி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்துவிட்டது. இந்தத் தண்ணீர் குறைபாடு மக்களின் தேவைகளையும், மண் வளத்தையும், நாட்டின் உயிர்நாடியான விவசாயத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றது. இதனால் வேளாண் உற்பத்தி குறைகிறது. எனவே, நிலத்தடி நீரைப் பராமரித்து அவற்றை முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவகால மழையின்போது கிடைக்கும் அதிகப்படியான தண்ணீரைச் சேமிப்பதற்குக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது, எஙகள் ஊரில் உள்ள எல்லாக் கிணறுகளிலும் தண்ணீர் குறையாமல் இருக்கும். குளத்தைச் சுற்றயுள்ள இடங்களில் எங்குத் தோண்டினாலும் ஏழடிக்குள் குடிதண்ணீர் கிடைக்கும். இப்போது எனது ஊரின் நிலை தலைகீழாக உள்ளது. எனது ஊரிலுள்ள எல்லாக் கிணறுகளும் குளங்களும் முழுவதுமாக வற்றிவிட்டன. கிணறுகளிலும் குளம் குட்டைகளிலும் சொட்டு தண்ணீர்கூட இல்லை என்று மக்கள் புலம்புவதை என்னால் கேட்க முடிகிறது.
நீர்நிலைகளை நாம் வற்றும்படிச் செய்வதும், அவை வற்றிப்போகின்ற காலங்களில் அதன் மேல் வீடுகள் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதும் நிலத்தடி நீர் குறைவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. அந்த நேரத்தில் கனமழைப் பொழிந்தால் நாம் கட்டிய கட்டடங்களைச் சுற்றிதான் வெள்ளம் வரும். இதனால் மழை பொழியும்பொழுது நிலத்தடிக்கு நீர் செல்வது தடுக்கப்படுவதோடு, அவ்வெள்ளநீர் கழிவுநீர் குழாய் வழியாக வீணாகக் கடலுக்குச் சென்றுவிடுகிறது. எனவே, கண்ணிருந்தும் குருடர்களாய் இராமல் நிலத்தடி நீரைச் சேமிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்