தேடுதல்

ஜம்முவிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மான்சர் ஏரி ஜம்முவிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மான்சர் ஏரி 

இனியது இயற்கை : மான்சர் ஏரி

புதுமணத் தம்பதிகள் ஏரியை மூன்று முறைச் சுற்றி வந்து, பாம்புகளின் அதிபதியான கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஆதிசேடனின் அருள் பெறுவதை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜம்முவிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மான்சர் ஏரி. மான்சர் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு ஏரியே மான்சர் ஏரியாகும். ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்டதாக இந்த ஏரியின் பரப்பு விரிந்துள்ளது.

மான்சர் ஏரி ஜம்முவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது புனித தலமாகவும், மானசரோவர் ஏரியின் புராணத்தையும் புனிதத்தையும் எடுத்துரைக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியின் கிழக்குக் கரையில் சேஷ்நாக், அதாவது, ஆதிசேடன் (ஆறு தலைகளைக் கொண்ட பாம்பு) சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஒரு பெரிய பாறாங்கல் உள்ளது. அதில் உள்ள சங்கிலிகள் ஆதிசேடனின் சிறிய பாம்புகளை குறிக்கும். உமாபதி மகாதேவன் மற்றும் நரசிம்மாவின் இரண்டு பழங்காலக் கோயில்களும், துர்காவின் கோயிலும் மன்சார் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளன. பண்டிகைக் காலங்களில் ஏரியின் நீரில் மக்கள் புனித நீராடுவார்கள். இந்துக்களின் சில சமூகங்கள் தங்கள் ஆண் குழந்தைகளின் முதல் முடி இறக்குதல் விழாவை இங்குச் செய்கின்றனர். புதுமணத் தம்பதிகள் ஏரியை மூன்று முறைச் சுற்றி வந்து, பாம்புகளின் அதிபதியான கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஆதிசேடனின் அருள் பெறுவதை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர்.

சுற்றுலா வருபவர்களுக்கு ஒரு சிறந்த படகு சவாரி செய்யும் ஏரியாக உள்ளது . இந்த ஏரியில் உள்ள பலவிதமான தாவர, மற்றும் விலங்கு உயிரிகள் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவருகின்றன. ஏரியை சுற்றிலும் சிமெண்ட்டிலான பாதை உள்ளது. ஏரியில் உள்ள பலவிதமான பறவைகள், ஆமைகள், மீன்களை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏரியின் அருகில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. குஜ்ஜர், மற்றும் பேகர்வால் மக்கள் பாரம்பரிய உடையுடன் நடமாடுவதையும், அவர்களின்  வழக்கமான தனித்துவமான வாழ்க்கை முறையையும், சுற்றியுள்ள இடங்களில், குறிப்பாக, மன்சார் மலைகளில் காணலாம்.

இந்த மன்சார் ஏரி சாலை, முக்கிய சாலையான பதான்கோட் (பஞ்சாப்) உதம்பூர் (ஜம்மு & காஷ்மீர், ஜம்மு மாகாணம்) சாலையுடன் இணைகிறது. மன்சாருடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய சுரின்சார் ஏரி ஜம்முவிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2022, 15:19