தேடுதல்

காஷ்மீரின் ஊலர் ஏரி காஷ்மீரின் ஊலர் ஏரி  

இனியது இயற்கை - காஷ்மீரின் ஊலர் ஏரி

பீர் பஞ்சல் தொடரில் உற்பத்தியாகும் சீலம் ஆறு, ஊலர் ஏரியின் வழியாக பாய்ந்து பாகிஸ்தானை அடைகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

காஷ்மீரில் அமைந்துள்ள ஊலர் ஏரி, குளிர்ச்சியான பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உவுளர் ஏரி அல்லது ஊலர் ஏரி, ஆசியா கண்டத்தில் இருக்கும் மிகப் பெரிய நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகும். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் ஹராமுக் மலையடிவாரத்தில், சோபோர் மற்றும் பன்டிபோர் ஆகிய நகரங்களுக்கிடையே அமைந்திருக்கிறது இந்த ஏரி. ஸ்ரீநகருக்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஏரி 200 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டிருக்கிறது. ஏரியின் பரப்பளவு காலநிலைக்கு ஏற்ப 12 - 100 சதுர மைல் (30 - 260 சதுர கிலோமீட்டர்) அளவுக்கு மாறுபடுகிறது. இது 24 கிமீ நீளமும், 10 கி.மீ. அகலமும் கொண்டது. அதிகபட்ச ஆழம் 14 மீட்டர் ஆகும். பீர் பஞ்சல் தொடரில் உற்பத்தியாகும் சீலம் ஆறு, இந்த ஏரியின் வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானை அடைகிறது. இவ்வேரியின்  நடுவில் சைனா லேன்க் என்ற ஒரு சிறிய தீவும் உள்ளது. இந்த தீவை சைனுல் அபி தின் என்ற மன்னர் உருவாக்கினார்.  ஏரியின் கரையில் 1950ம் ஆண்டுகளில் நடப்பட்ட வில்லோ மரங்களின் விளைவாக, ஏரி வறண்டு வருவதாக கருதப்படுகிறது. வில்லோ மரங்களிலிலிருந்துதான் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஏரியைச் சுற்றி 42 கிராமங்களில் ஏறக்குறைய 9 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

பண்டைய காலத்தில் உவுலர் ஏரி மகாபத்மசர் என்று அழைக்கப்பட்டது. இந்து மத புராணங்களும் இதை மகாபத்மசரசு என்றே குறிப்பிடுகின்றன. ஏரியின் பெரிய பரிமாணமும், நீரின் அளவும் பிற்பகல்களில் அதிகப் பாய்ச்சல் கொண்ட அலைகள் உருவாக வழிவகுக்கின்றன. சமஸ்கிருதத்தில் இந்த அலைகளுக்கு உல்லோலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள், புயல் வேகப் பாய்ச்சலில் உயரும் அலைகள் என்பதாகும். எனவே, இந்த ஏரியை உல்லோலா ஏரி என்று அழைப்பதும் பொருந்தும். இதுவே பின்னாளில் படிப்படியாக ஊலர் அல்லது உவுலர் என்றும் மருவியிருக்கலாம். காஷ்மீரி மொழிச் சொல்லான 'உல்' என்பதும், இதன் தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதாவது, உல் என்ற சொல்லுக்கு இடைவெளி அல்லது பிளவு என்ற பொருள் காஷ்மீரி மொழியில் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2022, 15:46