தேடுதல்

வெறுப்பைத் தூண்டிவிடுவதற்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடுவதற்கு எதிராக 

ஜூன் 18, வெறுப்புப்பேச்சுக்கு எதிரான முதல் உலக நாள்

வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுகள், தனிமனிதர், மற்றும், குழுமங்களின் மாண்பு குறைத்து மதிப்பிடப்பட காரணமாக அமைகின்றன – ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற பேச்சுகள், தனிமனிதர்கள், மற்றும், குழுமங்களின் மாண்பைத் தாக்குகின்றன என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வெறுப்புப்பேச்சுக்கு எதிரான முதல் உலக நாள் செய்தியில் கூறியுள்ளார்.

ஜூன் 18, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட வெறுப்புப்பேச்சுக்கு எதிரான முதல் உலக நாளுக்கென்று வெளியிட்டுள்ள செய்தியில், பன்மைத்தன்மை, மற்றும், சமூக ஒற்றுமைக்குப் பாதிப்பு, நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான விழுமியங்கள் மற்றும், கொள்கைகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை ,ஆகியவற்றுக்கு வெறுப்புப்பேச்சு காரணமாக அமைகின்றது என்று, கூட்டேரஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுகள், இனப்பாகுபாடு, அந்நியர் மீது வெறுப்பு, பெண்கள் மீது வெறுப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதோடு, தனிமனிதர், மற்றும், குழுமங்களின் மாண்பு குறைத்து மதிப்பிடப்பட காரணமாகின்றன என்றும், அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மீது கடுமையான எதிர்தாக்கத்தை இவை ஏற்படுத்துகின்றன என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வெறுப்புப்பேச்சுக்கள் முன்வைக்கும் ஆபத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவை ஆயுதங்களைக் கையிலெடுக்கச் செய்யும், மற்றும், உடலில் காயங்கள் ஏற்படக் காரணமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெறுப்புப்பேச்சுகள் வரலாற்றில் ஏற்படுத்தியுள்ள பயங்கரமான பெருந்துயரங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்டியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அவை, நவீன காலத்தில், யூத இனப்படுகொலைக்கும், 1994ம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி இனத்தவர்கெதிரான படுகொலைகளுக்கும் காரணமாய் இருந்தன என்று கூறியுள்ளார்.

வெறுப்புப்பேச்சு, காட்டுத்தீபோல் எல்லைகளைக் கடந்து பரவுவதற்கு, இணையதளம் மற்றும், சமூக ஊடகமும் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளன என்று கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், இது ஒவ்வொரு மனிதருக்கும் ஆபத்தாக அமைந்திருப்பதால், இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது அனைவரின் கடமை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.நா. பொது அவையில், வெறுப்புப்பேச்சுக்கு எதிரான உலக நாள் உருவாக்கப்பட்டது. அந்த நாள், ஜூன் 18ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 14:50