தேடுதல்

நாற்று நடப்படும் மருத நிலப்பகுதி நாற்று நடப்படும் மருத நிலப்பகுதி 

இனியது இயற்கை - மருத நிலம்

தொல்காப்பியம் மருதநிலக் கடவுளாக வேந்தனை கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மருதம் என்பது, பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர்.

வயலும் வயலைச் சார்ந்த இடத்தைக் குறிக்கும். இந்நிலப்பகுதியானது ஆறு,ஏரி, குளங்களைச் சார்ந்திருந்தது. இப்பகுதியுடன் தொடர்புடைய மரமான மருத மரத்தின் பூவினை வைத்தே இந்தத் திணைக்கும் பெயரிட்டனர் நம் முன்னோர்கள்

மருதநில மக்கள், மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர். தொல்காப்பியம் மருதநிலக் கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரியக் கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது. ஒப்பில்லா உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மையைக் கண்டுபிடித்தனர். மனிதரின் உழைப்பாலும் முயற்சியாலும் உருவான நிலம் மருதம். மழை நீருக்கு மாற்றாக ஆற்று நீரைத் தடுத்து தேக்கி வைத்து அந்த நீரைப் பயன்படுத்திப் பயிர்த்தொழில் செய்தனர், குறிஞ்சியையும் முல்லையையும்விட விளைச்சலில் முந்திச் சென்ற நிலம் மருதம் என்றால், அது மிகையாகாது. ஏனென்றால், நிலையான நீர்ப்பாசன வசதி, வண்டல் படிந்த ஆற்றுப் படுகைகள் என்று விளைச்சலுக்கு ஏற்ற பரப்பாக மருத நிலம் இருந்தது இதனால் நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதரின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன

உலக வரலாற்றில் ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலுமே நாகரீகம் வளர்ந்ததாகக் காண்கிறோம். அதே போன்று தமிழருடைய நாகரிகமும், பண்பாடும் இந்த மருத நிலங்களிலேயே ஏற்பட்டன. குடும்பம், சொத்து, அரசு என்ற நிறுவனங்கள் முதன் முதலில் மருதநிலத்திலேயே நிறுவப்பட்டன நாகரிக வாழ்வின் பரிணாமவளர்ச்சியின் முதற்கட்டமாக   உறவு முறையற்ற காட்டு மிராண்டி வாழ்வு சீரமைக்கப்பட்டு “குடும்பம்” என்ற அமைப்பு மருத நிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எனவேதான் மருதநில மக்கள் “குடும்பர்” எனவும் அழைக்கப்படுகின்றனர்.

கைத்தொழில்களும், கல்வியும், கலைகளும், வர்த்தகமும், செல்வமும், அரசியலும், அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களில் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்துள்ளனர். அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்பட்டது

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 09:49