தேடுதல்

பைக்கால் ஏரி பைக்கால் ஏரி 

இனியது இயற்கை - பைக்கால் ஏரி

பைக்கால் ஏரியில் உள்ள 22 சிறு தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு. இத்தீவு 72 கி.மீ. நீளம் கொண்டதாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பைக்கால் ஏரி என்பது, இரஷ்யாவின் தென் சைபீரியாவில் இர்கூத்க் மாநிலத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி ஆகும். இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரியாகும். இதன் ஆழம் 5,387 அடி. இது 25 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இது பரப்பளவில் உலகின் ஏழாவது மிகப் பெரிய ஏரியாக உள்ளது. உலகில் நீர்ம வடிவில், நிலத்தின் மேற்புறத்தில் உள்ள தூய்மையான நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. இரஷ்யாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் 1996ம் ஆண்டில் உலக பாரம்பரியக் களம் என்று அறிவித்து பாதுகாக்கப்படுகின்றது.

பைக்கால் ஏரியானது, 636 கிலோ மீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு 31,494 சதுர கிலோ மீட்டர். பெரிதும் சிறிதுமாய் ஏறத்தாழ 300 ஆறுகள் இவ்வேரிக்கு நீர் கொண்டு வருகின்றன. இவ்வேரியில் ஏறத்தாழ 22 சிறு தீவுகளும் உண்டு. இத்தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு. இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும்.

இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குமேல், வேறெங்கும் காண இயலாதன. இப்பேரேரியில் 1,085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி வகைகளும் 1,550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக, ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர். மேலும், இந்த ஏரியின் கிழக்குப் பகுதியானது, பர்யாட் பழங்குடியினரின் வாழ்விடமாக உள்ளது. 1996ம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதியாக இது அறிவிக்கப்பட்டது.  பைக்கால் ஏரி "ஏரிகளின் மூத்த சகோதரி" என்றும், "சைபீரியாவின் முத்து" என்றும் புனைப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2022, 13:00