58 நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் புலம்பெயர்ந்தோராக....
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வுலகில் தங்கள் மதநம்பிக்கைகளுக்காக கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் 76 நாடுகளுள் 58 நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் புலம்பெயர்ந்தோராக வெளியேறுவது தொடர்வதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரக்கணக்கு ஒன்று தெரிவிக்கிறது.
புலம்பெயரும் மக்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வரும் Open Doors என்ற அனைத்துலக அரசு-சாரா அமைப்பின் அண்மைய அறிக்கையின்படி, கிறிஸ்தவர்கள் பெருமளவில் சித்ரவதைகளை அனுபவிக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ சனநாயக குடியரசு, கொலம்பியா மற்றும் ஏமன் நாடுகளில், உலகில் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள மக்களுள் 46 விழுக்காட்டினர் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
இம்மாதம் 20ம் தேதி சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களுள் 68 விழுக்காட்டினர், பாகுபாடுகளையும் மதசகிப்பற்றத் தன்மைகளையும் கொண்டுள்ள சிரியா, வெனெசுவேலா, ஆப்கானிஸ்தான், தென் சூடான் மற்றும் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறது.
மதக் காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்களை வரவேற்பதில் உலக நாடுகளும் உலக அமைப்புகளும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளது Open Doors அமைப்பு.
இருபதாண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்குப் பகுதியில் 20 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது, ஒரு இலட்சத்து 66 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டும் இந்த மனித உரிமைகள் அமைப்பு, போர்கள் முடிவுற்றுள்ள நாடுகளில்கூட, கிறிஸ்தவர்கள் திரும்பிவருவதற்குரிய பாதுகாப்பு உறுதிகள் கொடுக்கப்படவில்லை எனவும் கவலையை வெளியிட்டுள்ளது. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்