இனியது இயற்கை: “காணி தேடினும் கரிசல் மண் தேடு”
மேரி தெரேசா: வத்திக்கான்
இரஷ்ய மொழியில் Chernozem என்பது, கருப்பு நிலம், அல்லது கருப்பு மண் என்பதாகும். இது, இலை, தழை மக்கிய சத்துள்ள தோட்டமண்ணை (humus) அதிக அளவில் (4% முதல் 16%) கொண்டிருக்கும் கருமைநிற மண்ணாகும். இதில் பாஸ்போரிக் அமிலம், பாஸ்பரஸ், அமோனியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இம்மண்ணுக்கு, தண்ணீரை உறிஞ்சும் தன்மை அதிக அளவில் இருப்பதால், வேளாண் உற்பத்திக்கு ஏற்ற மண்ணாகவும் இருக்கிறது. 1883ம் ஆண்டில், இரஷ்ய புவியியல் ஆய்வாளர் Vasily Dokuchaev என்பவர், இம்மண் வளம் குறித்து முதலில் அறிவித்தார். ஏறத்தாழ 23 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள கருப்பு மண்ணை, FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம், இரு பகுதிகளில் காணப்படும் மண்ணாகப் பிரித்துள்ளது. முதல் பகுதி, கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பகுதிகளிலும், இரண்டாவது பகுதி, யூரேசியா அதாவது குரோவேஷியா நாட்டின் கிழக்கிலிருந்து சைபீரியா வரையுள்ள பகுதிகளிலும் உள்ளது. முதல் பகுதியிலுள்ள இம்மண், குறைந்தது 25 செ.மீ. தடிமானத்தைக் கொண்டுள்ளது. இம்மண்ணில், கார்பன் மற்றும் இலை, தழை மக்கிய சத்துள்ள தோட்டமண் அதிகமாக உள்ளது. உக்ரைன் நாட்டிலுள்ள இம்மண், பல செ.மீ. தடிமானங்களைக் கொண்டிருக்கிறது. இவ்வகை மண் போலந்தில் ஒரு விழுக்காடு நிலப்பகுதியிலும், வடகிழக்குச் சீனாவிலும், ஆஸ்திரேலியாவின் Nimmitabel பகுதியிலும் காணப்படுகிறது. உக்ரைன் நாட்டின் இம்மண் வளமே, ஐரோப்பாவின் உணவுப்பெட்டி என, அந்நாடு அழைக்கப்படுவதற்கு காரணமாகும். நீண்டகால மண்வள அறிவியலுக்குப் புகழ்பெற்ற இரஷ்யர்கள், உக்ரைனை ஆக்ரமிக்க ஆவல்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம் என, சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். உக்ரைனில் வேளாண் நிலத்தை விற்பது 1992ம் ஆண்டுவரை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை 2020ம் ஆண்டில் நீக்கப்பட்டது.
இந்தியாவிலுள்ள கருப்பு மண்ணில், பருத்தி விளைவிக்கப்படுவதால் இதனை பருத்தி மண் என்றும் அழைப்பர். இவ்வகை மண், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளிலும், தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும், இலங்கையில் முருங்கன், மாத்தறை, அம்பேவில போன்ற உலர்வலயப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இம்மண், பூமியிலிருந்து வெளிவந்த பாறைக்குழம்பு படிதலால் ஏற்பட்டது. கரிசல் மண்ணில் கரும்பு, வாழை, உளுந்து, சோளம், நிலக்கடலை, தினை, கேழ்வரகு, கொத்தமல்லி போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்