தேடுதல்

இந்தியக் கைம்பெண்கள் இந்தியக் கைம்பெண்கள்  

வாரம் ஓர் அலசல்: போராட்ட வாழ்வை பூந்தோட்டமாக்க உதவுவோம்

இன்று உலகில் ஏறத்தாழ 35 கோடி கைம்பெண்கள் உள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள் மாணவன் ஒருவன் தன்னுடைய ஆசிரியர் வீட்டிற்குச் சென்றிருந்தான். வா மகனே என்று அவனை அன்போடு வரவேற்ற ஆசிரியர், இந்த நாற்காலியில் உட்காருப்பா என்று அவனை அமரவைத்து பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் சென்று ஒரு கப்பில் தேனீர் கொண்டுவந்து கொடுத்தார் ஆசிரியர். அதைக் குடிக்காமல் அந்தக் கப்பிலுள்ள தேனீரையே மிரள மிரளப் பார்த்துக்கொண்டிருந்தான் மாணவன். குடி குடி என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ஆசிரியர். ஆனால் அந்த மாணவனோ தேனீரைக் குடிப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஆசிரியர் மாணவனைப் பார்த்து, தம்பி உனக்கு என்னதான் பிரச்சனை அப்படின்னு கேட்டுவிட்டு அந்த கப்பை வாங்கிப் பார்த்தார். அந்த தேனீருக்குள் ஒரு ஈ தத்தளித்துக்கொண்டிருந்தது. உடனே ஆசிரியர் வாசலுக்கு ஓடிப்போய் ஓர் இலையைப் பறித்துவந்து, அந்த ஈயை எடுத்து அந்த இலைமேல் வைத்தார். உடனே அந்த ஈ, அது உடம்பிலிருந்த ஈரம் காய்ந்தவுடன் ஒரு நொடியில் பறந்துபோனது. பின்னர் ஆசிரியர் வீட்டுக்குள் வந்து, மாணவனிடம், ஆனாலும் தம்பி, உனக்கு இவ்வளவு அகங்காரம் கூடாது என்று சொன்னார். மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சார். நீங்க தேனீரைக் கொடுத்தவுடனேயே குடிக்கத்தான் போனேன். ஆனால், அதில் ஈயைப் பார்த்ததும், அதைச் சொன்னால், உங்களது மனது கஷ்டப்படும் என நினைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன் என்றான் மாணவன். அதற்கு ஆசிரியர், தம்பி தேனீரில் ஈயைப் பார்த்தவுடன், அதைக் குடிக்கிறதா, வேண்டாமா என்ற பிரச்சனை உனக்கு, ஆனால், அந்த ஈக்கு வாழ்வா சாவா என்ற உயிர் பிரச்சனை, உன்னை மையப்படுத்தியே நினைத்துக்கொண்டிருந்தாயே, அதனால்தான் உன்னை அகங்காரம் பிடித்தவன் என்று சொன்னேன் என்றார்.     

இன்று சமுதாயத்தில் பலர் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பலரிடம் பேசும்போது இதை நாம் கவனித்திருக்கலாம். தங்களின் சாதனைகள், சொத்து சுகம், செல்வம், வசதி வாய்ப்புகள் வேலை இப்படியே பெருமை பேசிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய மனிதரின் உலகம், உச்சந்தலையில் தொடங்கி, உள்ளங்காலில் முடிந்துவிடும். மற்றவர்களை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இவர்களது உலகம், “நீயில்லாத உலகம், நான் மட்டுமே” என்ற தன்முனைப்பிலே இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் இவர்கள் வாழ்வில் மற்ற மனிதருக்கு இடமே கிடையாது. இந்த மனிதர்களுக்கு மத்தியில், வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் வாழ்ந்து வருபவர் பலர் உள்ளனர். அதிலும் உக்ரைன் போர் போன்று, உலகின் சில பகுதிகளில் இடம்பெறும் போர்கள், வன்முறைத் தாக்குதல்கள், வறட்சி, பஞ்சம், புயல், வெள்ளம், நில அதிர்வு போன்றவற்றால் கடுந்துயர்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே உள்ளது. இத்தகைய பிரச்சனைகளால் பெண்களும், சிறாரும்தான் அதிகமாக இன்னலுக்கு உள்ளாகின்றனர். போர்களில் எத்தனையோ இளம் தாய்மார் கணவர்களை இழந்து குடும்பப் பாரத்தைச் சுமந்து வருகின்றனர்.

கைம்பெண்களின் நிலை

இன்று உலகில் ஏறத்தாழ 35 கோடி கைம்பெண்கள் உள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கைம்பெண்களின் எண்ணிக்கை 4 கோடியே 32 இலட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது இது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 விழுக்காடாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள கைம்பெண்களின் எண்ணிக்கையாகும். இலங்கை அரசின் புள்ளிவிவரப்படி, தமிழர் பெருமளவில் வாழ்கின்ற வடகிழக்கு மாநிலங்களில் 89,000 தமிழ் கைம்பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்துக்காக வளைகுடா நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்று கொத்தடிமையாகும் துயரத்தையும் எதிர்கொள்கின்றனர் என்று 2021ம் ஆண்டு ஏப்ரலில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது. இலங்கையிலுள்ள தமிழ் கைம்பெண்கள், உள்நாட்டுப் போரில் காணாமல்போன துணைவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து அரசை விண்ணப்பித்து வருகின்றனர். உக்ரைனில் போர்ப் பகுதிகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக கைம்பெண்கள், நீண்டகாலமாக  அடிப்படை உரிமைகள் மற்றும், மாண்பை இழந்து, சமுதாயங்களின் ஆதரவின்றி கைவிடப்பட்ட அநாதைகளாய் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதம் ஏந்திய மோதல்கள், புலம்பெயர்வு, கோவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றால் கைம்பெண்களின் எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ள பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது. பெருந்தொற்றில் கணவரை இழந்த 32 வயதான ரேணு என்பவர் இவ்வாறு பிபிசி ஊடகத்திடம் சொல்லியிருக்கிறார்

கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

கைம்பெண்கள்
கைம்பெண்கள்

என் கணவர் இல்லாத துக்கம் என்னை வாட்டும்போது சில நாள்கள் நான் அவருடைய வெள்ளைச் சட்டையை அணிந்து கொள்வேன். ஆனால் இந்த சட்டை என்றென்றும் நிலைக்காது என்பதை நான் அறிவேன். எதுவுமே நிலையானது அல்ல. திருமணம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது நடக்கவில்லை. எனது ஒன்பது வயது மகள், நான் உறங்கும்வரை தூங்கமாட்டாள். அவளுக்கு ஒன்பது வயதுதான், ஆனால் மரணம் ஒருவரை விரைவில் வளர வைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு நாள் அவள் மாடியில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவள் தன் தந்தையின் புகைப்படத்தை கையில் பிடித்தவாறு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று, இப்படியே நீ அழுதுகொண்டிருந்தால் நான் எப்படி சரியாகச் சிந்திக்க முடியும், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் என்று கேட்டேன். இனி அழமாட்டேன் என்று அவள் எனக்கு உறுதியளித்தாள். கூடவே நானும் அழமாட்டேன் என்று உறுதி கூறும்படி என்னிடம் சொன்னாள். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம்.

Hawa, மத்திய ஆப்ரிக்க குடியரசைச் சேர்ந்தவர். இவருக்கு 23 வயது நிரம்பியபோது இவரின் கணவர், அந்நாட்டில் நடந்த போரில் கொல்லப்பட்டார். அப்போது அவர் எட்டு மாத கர்ப்பிணி. ஹவாவின் தந்தையும் சகோதரரும் அப்போரில் கொல்லப்பட்டனர். அவரது தாய் காணாமல்போய்விட்டார். எனவே தனித்துவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான அவர், காமரூன் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து Gado முகாமில் Haphisi Ibrahim என்ற ஓர் ஆண் மகவையும் பெற்றெடுத்தார்.

Rosalia Tuyuc Velásquez என்பவர், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் San Juan Comalapa நகரைச் சேர்ந்தவர். அந்நாட்டில் இராணுவத்திற்கும் கெரில்லா குழுக்களுக்கும் இடையே 36 ஆண்டுகளாக நடந்த ஆயுதம் ஏந்திய மோதல்களின்போது, 1984ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி ரொசாலியாவின் கணவரை இராணுவம் பிடித்துச் சென்றது. அதிலிருந்து அவர் மருத்துவமனைகள், சிறைகள் என பல இடங்களில் தேடியும் அவரது கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர் தன் கணவரைத் தேடிக்கொண்டிருக்கிறார். இந்தப் போரில் கொல்லப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் பழங்குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண்கள் போன்று, எத்தனையோ கைம்பெண்கள் கணவர்களை இழந்து பொருளாதார பாதுகாப்பின்மை, சமூகத்தின் இழிவான பேச்சுகள், வேதனைதரும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் தொடர்ந்து துன்புற்று வருகின்றனர். இவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் மனித உரிமை வழக்கஞறிரான Margaret Owen என்பவர், தான் கைம்பெண் நிலைக்கு உள்ளாகும்வரை இப்பெண்களின் இடர்களைப் புரிந்துகொண்டதில்லை என்று சொல்லியிருக்கிறார். உலகில் 36 நாடுகளில், பெண்கள், ஆண்களுக்குச் சமமாகச் சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதி கிடையாது. 31 நாடுகளில், குடும்பங்கள் அல்லது வீடுகளின் தலைவர்களாக, பெண்கள் இருக்க முடியாது. 17 நாடுகளில் பெண்கள், ஒரு தொழிலைச் செய்யமுடியாது. இத்தகைய பாகுபாட்டுச் சட்டங்களால், சொத்து, குடியிருப்பு, வருவாய், சமூக நலன்கள், வேலைவாய்ப்புகள் போன்றவை கைம்பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.

உலக கைம்பெண்கள் நாள்

எனவே கைம்பெண்களின் நிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து, அவர்கள் மாண்புடன் வாழ வழியமைக்கும் நோக்கத்தில், ஐ.நா. நிறுவனம் 2010ம் ஆண்டில் உலக கைம்பெண்கள் நாளை உருவாக்கி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 23ம் தேதி அந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. வருகிற வியாழன் உலக கைம்பெண்கள் நாள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின், அம்மக்களிடம், போரினால் துன்புறும் மக்களுக்கு என்ன செய்கின்றீர்கள் என உங்களையே கேளுங்கள் என்று கூறினார். நாமும், அப்போர் உட்பட பல்வேறு காரணங்களால் துன்பங்களை எதிர்கொள்கின்ற மக்களுக்காக, குறிப்பாக கைம்பெண்களுக்காக என்ன செய்கிறோம் என மனப் பரிசோதனை செய்வோம்.

போராட்டமே வாழ்க்கை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. மனிதர் உட்பட, உயிரினங்கள் அனைத்துமே, உயிர் வாழ்க்கைக்காகப் போராடுகின்றன. இந்தப் போராட்டத்தைப் பூந்தோட்டமாக்க, அதாவது மகிழ்ச்சியானதாக ஆக்குவது அவரவர் சாமார்த்தியத்தைப் பொருத்தது. துயர்கண்டு அதிலே துவண்டுவிடாமல் புதுவாழ்வைத் துவக்கும் எத்தனையோ கைம்பெண்கள் இருக்கின்றனர். கைம்பெண்களே, நீங்கள் கூண்டுக்குள் அடைபட்டுள்ள உயிரினம் அல்ல, மாறாக அதை உடைத்தெறிந்து வெளியேவந்து வீரநடைபோட வேண்டிய துணிச்சல் பெண்கள். கவிஞர் மேத்தா அவர்கள் எழுதியிருப்பதுபோல, பிறைச்சந்திரனே, உனக்குள்தான் பூரண சந்திரன் புதைந்திருக்கிறது. கவிஞர் வைரமுத்து அவர்கள், காலுக்கு செருப்பு வந்தது எப்படி, முள்ளுக்கு நன்றி சொல் என்று பதிவுசெய்திருக்கிறார். ஆதலால் இதை உணர்ந்து சொந்த வாழ்வையும், மற்றவர் வாழ்வையும் பூந்தோட்டமாக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2022, 15:01