தேடுதல்

இந்திய விவசாயி இந்திய விவசாயி  

இனியது இயற்கை : விவசாயத்திற்கு ஒரு பத்மஸ்ரீ விருது

கையில் பணம் இல்லாத காரணத்தால், தன்னிடமிருந்த தன்னம்பிக்கையை மூலதனமாகப் போட்டு, தனி ஒருவராக நீருக்காக சுரங்கம் வெட்டத் தொடங்கிய விவசாயி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மண்ணைப் பொன்னாக்கும் வித்தையில் வெற்றிகண்ட ஒரு விவசாயிக்கு இந்திய அரசு 2022க்கான ‘பத்ம ஸ்ரீ’ விருதைக் கொடுத்து கவுரவித்துள்ளது. தரிசு நிலத்தை முப்போகம் விளையும் பூமியாக மாற்றிய கர்நாடக மாநிலத்தின் ‘அமை மகாலிங்க நாயக்’ என்ற விவசாயியே அவர்.  அதிசய மனிதர், அற்புத மனிதர், சுரங்க மனிதர் என பல்வேறு விதமான அடைமொழிகளுடன் அறியப்படும் இவர், முறையான ஏட்டுக் கல்வியை பயிலாதவர். விவசாயத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவரின் நேர்மையைப் பார்த்த அந்த பகுதியில் இருந்த மஹாபாலா பாட் என்ற நிலக்கிழார் மலைப்பகுதியிலிருந்த அவருக்கு சொந்தமான தரிசு நிலத்தை 1978ல் அமை மகாலிங்க நாயக்கிற்கு தானமாகக் கொடுத்துள்ளார்.

தண்ணீர் இல்லாத அந்த நிலத்தில் விவசாயம் செய்வது சவாலான காரியமாக இருந்ததால், பழங்கால வழக்கப்படி சுரங்கம் வெட்டி அதன் மூலம் தண்ணீரை நிலத்திற்கு கொண்டுவர திட்டமிட்டு பணியைத் தொடர்ந்தபோது பலரும் கேலி செய்தனர். சுரங்கம் வெட்ட வேலையாட்களை நியமித்தால் செலவு அதிகம் என்பதாலும், அதற்குப் பணம் இல்லாத காரணத்தாலும் தன்னிடமிருந்த தன்னம்பிக்கையை மூலதனமாகப் போட்டு தனி ஒருவராக தனக்கு நிலம் கிடைத்த அதே ஆண்டில் அவர் சுரங்கம் வெட்ட தொடங்கியுள்ளார். இருந்தாலும் பகல் நேரத்தில் மரம் ஏறச் சென்று, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டுமே சுரங்கம் வெட்டியுள்ளார். ஆறாவது முயற்சியில்தான், அதுவும் 4 ஆண்டுகள் முயற்சிக்குப்பின்தான் 315 அடியில் அவருக்கு நீர் கிடைத்துள்ளது. அதோடு தன் வீட்டு தேவைக்காக தனியே ஏழாவது சுரங்கம் ஒன்றும் அவர் வெட்டியுள்ளார். மழை நீர் சேகரிப்பிலும் அவர் அசத்தலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என வேளாண் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தற்போது அவரது நிலத்தில் 300 பாக்கு மரம், 150 முந்திரி மரம், 75 தென்னை மரம் மற்றும் வாழை பயிர் மற்றும் ஊடு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.  அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதுகூட தெரியாமல் அவர் நிலத்தில் வழக்கம்போல வேலை செய்து வந்துள்ளார். அவரைத் தொடர்புகொண்ட பத்திரிகையாளர்கள் அது குறித்து சொன்னபோது, ‘விருது கிடைத்ததில் மகிழ்ச்சி’ என சொல்லியுள்ளார். தற்போது அவரது நிலம் விவசாயிகள், வேளாண் அறிவியலாளர்கள் என பலருக்கும் பாடம் சொல்லி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2022, 14:06