இனியது இயற்கை: வேதிய உரங்களால் நிலம், நீர். உயிரினங்கள் பாதிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
நைட்ரஜன் அதாவது தளைச்சத்து, பொட்டாசியம் அதாவது மணிச்சத்து, பாஸ்பரஸ் அதாவது சாம்பல் சத்து ஆகிய மூன்றும் பயிர்களின் வளர்ச்சிக்கு முதன்மையான சத்துக்கள் ஆகும். இவை வேதிய உரங்கள் வழியாக, செயற்கையாக நிலங்களில் கொட்டப்படுகின்றன. ஆனால் இத்தகைய உரங்களை, மற்ற கலவைகளுடன் கலந்து அம்மோனியம் சல்பேட்டாகவோ, யூரியாகவோ, அல்லது சூப்பர் பாஸ்பேட்டாகவோதான் நிலத்தில் போடமுடியும். மேலும், இத்தகைய கலவைகள் இருந்தால்தான் தாவரங்கள், தங்களுக்குத் தேவையான சத்துக்களைக் கலவைகளிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். இத்தகைய வேதியக் கலவை உரங்களில், தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு, பிறகலவை வேதியப் பொருள்களை அப்படியே நிலத்தில் விட்டுவிடுகின்றன. நிலத்தில் எஞ்சியுள்ள இந்த வேதியக் கலவைகளால் நிலம் விரைவிலேயே உவர் நிலமாக, விளைச்சலுக்குப் பயனற்றதாக மாறிவிடுகின்றது. ஆகவே, செயற்கை வேதிய உரங்கள், சில ஆண்டுகளுக்கு விளைச்சலைப் பெருக்கலாம். ஆனால் இவை காலப்போக்கில், நிலங்களை வளமற்றதாக ஆக்குவதோடு மட்டுமன்றி, விளைச்சலுக்கே பயனற்றதாக மாற்றிவிடுகின்றன. வயலுக்கு இடப்படும் உரங்கள், மழை நீரால் அல்லது பாசன நீரால் அடித்துச்செல்லப்படுவதால், அவை கடைசியில் குளங்களில், அல்லது கண்மாய்களில் அல்லது இறுதியாக கடல்களில் கலக்கின்றன. இந்த வேதிய உரத்தினால், தண்ணீரில் அதிகமான சத்துக்கள் சேர்ந்து, சூரிய ஒளியின் உதவியுடன் பாசம் போன்ற முதன்மைத் தாவரங்கள் தண்ணீரின் மேற்பரப்பில் உருவாகி, சூரிய ஒளி நீரினுள் செல்வதைத் தடுத்துவிடுகின்றன. இதனால் காற்றிலிருந்து தண்ணீரில் கலக்கும் பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைகிறது. இத்தகைய தண்ணீரில் எந்த உயிரினமும் வாழ முடியாது. இதனால் அவை இறந்த நீர்நிலைகளாக மாறிவிடுகின்றன. அவற்றில் வாழும் உயிரினங்களும் இறந்துவிடுகின்றன. (நன்றி அ.பணி. முனைவர் ச.மி.ஜான் கென்னடி சே.ச.)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்