சங்ககால தமிழர் உணவு சிறு தானிய வகைகள்
மெரினா ராஜ். வத்திக்கான்
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதும் முக்கியமானதும் உணவே. மனித வாழ்வின் இன்றியமையாத ஊட்டச்சத்தும் உணவே. நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் நிலவுடைமைச் சமூகமாக மாறிய பின்னர் ஓரிடத்தில் தங்கி பயிரிட்டு அறுவடைசெய்து வாழத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த விளைபொருட்களின் அடிப்படையிலேயே அந்தந்த மக்களின் உணவுப் பழக்கவழக்கம் அமைந்திருந்தது. எதனைப் பயிரிட்டார்களோ அதை உண்ணவும் பக்குவப்படுத்தவும் சமைத்து உண்ணவும் பழகிய மக்கள் அதையே தங்களின் உணவுப் பழக்க வழக்கமாகவும் அடையாளமாகவும் மாற்றிக்கொண்டனர்.
உயிர் வாழ்க்கைக்கென உருவான உணவு அதன் பின் சுவைக்காக உண்ணப்பட்டது. பின் ஒரு மனிதனின் செழிப்பையும் வசதியையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவும் காலப்போக்கில் மாறிப் போனது. “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற தெளிவு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தானியங்கள் விளைவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் உணவின் வகைகள் விரிந்து அந்தந்த நில மக்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அவர்களின் உணவானது. அறுசுவையோடு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை கொண்டு சமைக்கப்பட்ட உணவு முறை தமிழரின் அடையாளமாக மாறியது. அவர்கள் பயன்படுத்திய ஒரு சில தானிய வகைகள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் காணலாம்.
சங்ககால தினை. குறிஞ்சி நில மக்களின் உணவு தேனும் தினையும் என்பது நாம் நன்கறிந்தது. நார்ச்சத்து நிரம்பிய திணையை தினம் தோறும் உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிறு குடல் கணையம் போன்றவற்றில் ஏற்படும் புண்களை ஆற்றி அவற்றை வலுப்படுத்தும். மூளையின் செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து ஞாபகத்திறனை மேம்படுத்துவதால் அல்சைமர் நோய் வராமல் நம்மை பாதுகாக்கலாம்.
சாதாரண மக்களின் சாப்பாடு சாமை. சாதாரண மக்களும் விரும்பி உண்ணும் சாமை முல்லை நில மக்களின் உணவாக திகழ்கின்றது. இரும்புச்சத்து அதிகம் கொண்ட சாமை இரத்த சோகை சர்க்கரை நோய் நீரழிவு நோய் வயிற்றுக் கோளாறு போன்றவற்றைக் கட்டுப்பாட்டிலும் வராமலும் தடுக்க உதவுகிறது. தாது பொருட்களை அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் உயரிய பணியைச் செய்யும் சிறப்பு வாய்ந்தது சாமை. இது போன்று உடலை சீராக வைக்க உதவும் குதிரை வாலி புரதம் கால்சியம் விட்டமின் கொண்ட வரகரிசி உயர் இரத்த அழுத்தம் கல்லீரல் நோய்கள் இதய நோய்கள் வராமல் தடுக்கும் கேழ்வரகு ஆரோக்கியமான தோலிற்கும் கண்பார்வைக்கும் உதவும் கம்பு போன்ற பல சிறுதானிய வகைகள் நம்மிடம் உள்ளன.
நம் பழங்காலத் தமிழர்கள் ஆரோக்கியமாக முதுமையிலும் இளமையாக வாழ்ந்ததற்கு காரணம் அவர்களது உணவுபழக்கவழக்கம். அவர்களின் வழக்கத்தை இன்று நாம் பழக்கமாக்கிக் கொண்டால் நம்முடைய வருங்காலமும் வளமாக இருக்கும் உணவே மருந்து மருந்தே உணவு என்ற நிலை மாறி நஞ்சே உணவு உணவே நஞ்சு என்று உண்டு கொண்டிருக்கும் நிலையை மாற்றி இயற்கை சிறுதானிய வகைகளை உண்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்