தேடுதல்

கிளிமஞ்சாரோ மலை கிளிமஞ்சாரோ மலை  

இனியது இயற்கை: ஆப்ரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை

கிளிமஞ்சாரோ மலை, பூமியின் நடுநிலைக்கோட்டிற்குத் தெற்கே 330 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும், அம்மலை குளிர்காலத்தில் பனிச்சிகரங்களுடன் காணப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆப்ரிக்கா என்றவுடனேயே அனல்கொதிக்கும் சஹாரா பாலைவனம், சமவெளிகள், செரிங்கெத்தி (Serengeti) இயற்கை வனப்பகுதி, விக்டோரியா நீர்வீழ்ச்சி போன்றவையே முதலில் நினைவுக்கு வரலாம். ஆனால் அக்கண்டத்தில் உலகிலே மிக அழகான மலைகளும் உள்ளன. ஆப்ரிக்காவில் 98 மலைகள் உள்ளன எனவும், அவற்றில், டான்சானியா நாட்டு கிளிமஞ்சாரோ (5,895 மீ), கென்யா நாட்டு கென்யா (பாஸ்டியன் சிகரம் 5,199 மீ), உகாண்டா மற்றும் காங்கோ மக்களாட்சி குடியரசிலுள்ள ஸ்டான்லி (மார்கேரிட்டா சிகரம், 5,109),  உகாண்டா நாட்டு ஸ்பேக்கே (4,890 மீ), பேக்கர் (4,844 மீ), காங்கோ மக்களாட்சி குடியரசின் எமின் (4,798 மீ), உகாண்டா நாட்டு ஜெஸ்ஸி (4,715 மீ),  டான்சானியா நாட்டு மெரூ, (சோஷலிஸ்ட் சிகரம், 4,562 மீ), எத்தியோப்பியா நாட்டு செமியென் (ராஸ் தாஷென் சிகரம், 4,550 மீ),  காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் ருவாண்டா நாடுகளின் கரிசிம்பி (4,507 மீ) ஆகியவை, மிக உயரமான பத்து மலைகள் எனவும் குறிக்கப்பட்டுள்ளன.

கிளிமஞ்சாரோ மலை

இவற்றில், டான்சானியா நாட்டின் வடகிழக்கே, கென்யா நாட்டு எல்லைக்கருகில்  அமைந்திருக்கின்ற கிளிமஞ்சாரோ, 5,895 மீட்டர் உயரத்தைக் கொண்டு ஆப்ரிக்காவிலே மிக உயரமான மலையாக மட்டுமல்லாமல், உலகிலே தனித்து நிற்கும் ஒரே மலையாகவும் விளங்குகிறது. எரிமலை வகையைச் சேர்ந்த இம்மலை, ஏறத்தாழ பத்து இலட்சம் ஆண்டுகளுக்குமுன்பு உருவாகத் தொடங்கியது என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இது, கிழக்கு மேற்காக ஏறத்தாழ எண்பது கிலோ மீட்டரைக் கொண்டிருக்கிறது. கிளிமஞ்சாரோவின் Kibo, Mawenzi, Shira ஆகிய மூன்று முக்கிய சிகரங்களுமே எரிமலை இயல்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை தற்போது இயக்கமற்று உள்ளன. இம்மலையின் மத்தியில் 5,895 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ள மிக உயரமான கிபோ சிகரம், 4,60,000 ஆண்டுகளுக்குமுன் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இச்சிகரத்தை, 1889ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டு புவியியல் ஆய்வாளரான Hans Meyer அவர்களும், மலையேறுவதில் வல்லுநராகிய ஆஸ்ட்ரியாவின் Ludwig Purtscheller அவர்களும் முதலில் அடைந்தனர். கிபோ சிகரத்தில் 3,60,000 ஆண்டுகளுக்குமுன்பு பெரிய எரிமலை வெடிப்பு இருந்தது எனவும், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இச்சிகரம் எரிமலை வெடிப்பால் தாக்கப்படவில்லை எனவும், வருங்காலத்தில் இங்கு எரிமலை வெடிக்கலாம் எனவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு சமவெளிக்கு மேலே உயர்ந்து நிற்கும் கிளிமஞ்சாரோ மலையின் ஒரு சரிவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு 1973ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சொத்தாகவும் இம்மலை குறிக்கப்பட்டது. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2022, 18:28