தேடுதல்

செப்டம்பர் 27 - உலக சுற்றுலா நாள் செப்டம்பர் 27 - உலக சுற்றுலா நாள் 

வாரம் ஓர் அலசல் - உலக சுற்றுலா நாள்

மகிழ்ச்சி, அறிவு, ஆன்மத்தேடல், பொழுதுபோக்கு, இவைகளில் ஒன்றை முன்னிலைப்படுத்தி மனிதர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சுற்றுலா எனப்படுகின்றன.

மெரினா ராஜ்- வத்திக்கான்

கிணற்றுத் தவளைக்கு கிணறே உலகம் என்பது பழமொழி. இப்படி கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஊர், மாநிலம், நாடு, கண்டம் என ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணித்து பல்வேறு மக்களின் பழக்க வழக்கங்களைப் பார்த்து இரசித்து, கற்றுச் சிறந்திட வேண்டும் என்று நினைத்த மனிதர்களால் உருவானது சுற்றுலா. மகிழ்ச்சி, அறிவு, ஆன்மீகத்தேடல், பொழுதுபோக்கு  இவைகளில் ஒன்றை முன்னிலைப்படுத்தி மனிதர்கள்  மேற்கொள்ளும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தி, உலகின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதை எடுத்துரைப்பதற்காகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 உலக சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது.

மனித குலத்தை மேம்படுத்தவும் பொருளாதார வளத்தை அதிகப்படுத்தவும், 1970ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, செப்டம்பர் 27ஆம் நாள் உலக சுற்றுலா நாளாகக் கொண்டாட வலியுறுத்தப்பட்டது. அதன்படி உலக சுற்றுலா நிறுவனத்தின் உதவியுடன் இந்த  நாள் சுற்றுலாவின் மதிப்பை, மாண்பை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கொண்டாட்டங்கள் வழியாக  சிறப்பிக்கப்படுகின்றது. 

பயணங்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்று. நீண்ட தூர பயணம், ஜன்னல் ஓரப் பயணம், வார இறுதியில் மலைப் பயணம், நடைபயணம், திருப்பயணம், மாதத்திற்கு ஒருமுறை, ஆண்டுக்கு பலமுறை என தனியாக, குடும்பமாக, நண்பர்களாக  பல பயணங்களை நாம் மேற்கொண்டிருப்போம். பிற இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும், அவர்களது கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மனிதர்களாலே  இப்பயணங்கள் முதன் முதலில் உருவாக ஆரம்பித்தன. சுற்றுலாத்துறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்துறையாகக் கருதப்படுகின்றது. போக்குவரத்து, உணவு, தங்குமிடம், பொழுதுபொக்கு, ஓய்வு என எல்லாவற்றையும் இணைத்து செயல்படுவதால் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக சுற்றுலா திகழ்கின்றது. உலக நாடுகளின் முக்கிய தொழில்துறையாகத் திகழும் சுற்றுலா, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அதிக உதவி செய்வதோடு, அதிக இலாபம் பெற்றுத்தரும் தொழிலாக, மூன்றாம் உலக நாடுகளாலும் பார்க்கப்படுகின்றது. சுற்றுலாவிற்கு மிக முக்கியமானது திட்டமிடல். இத்திட்டமிடல் சரியாக திட்டமிடப்படாதபோது அதிக வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் மட்டுமே தருகின்றது. குடும்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, பொழுதுபோக்குச் சுற்றுலா  என பல வகைகளில் மேற்கொள்ளப்படும் இச்சுற்றுலாவை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றன. அந்த ஆண்டு முழுவதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல செயல்திட்டங்களை மேற்கொண்டு தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை இதன் வழியாக அதிகப்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் மேற்கொண்ட சுற்றுலாக்கள், அதன் இடங்கள் கணக்கிடப்பட்டு அறிக்கையாக வெளியிடப்படுவதால் பல நாடுகள் தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இச்சுற்றுலாக்களை பார்க்கின்றன. அதிக வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்ந்த நாடு எது என்ற அறிவிப்பு ஒன்றினை உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டது.

சுற்றுலாவிற்கு பணமும் நேரமும் மிக அவசியம். பணமிருந்தால் நேரமிருப்பதில்லை நேரமிருந்தால் பணமிருப்பதில்லை. உலக மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட, கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய இடங்களாக 9 மிக முக்கியமான இடங்கள் கூறப்படுகின்றன. அவைகள், அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி, எகிப்து-பிரமிடுகள், சீனப்பெருஞ்சுவர், பிரான்ஸ்-ஈஃபில் கோபுரம், ஏதேன்ஸ்-ஆக்ரோபோலிஸ், பிரேசில்-கிறிஸ்து மீட்பர் சிலை, இங்கிலாந்து-ஸ்டோன் கெஞ்ச், பெரு-மச்சுபிச்சு, ஐஸ்லாநாந்-ஊதா நிற லாகூன் போன்றவைகளாகும். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது விண்ணிலும் சுற்றுலா மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலா பயணிகளை விண்ணிற்கும் அழைத்துச் செல்ல எடுக்கும் இம்முயற்சிகளுக்கு ‘ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் வெற்றி பெற்று நமது கனவை  நினைவாக்கும் விதமாக விண்வெளியில் ஒரு பயணத்தை மேற்கொண்டு விண்வெளி சுற்றுலா நாள் கொண்டாடப்பட இருக்கின்றது. பிற மனிதர்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் பற்றி  தெரிந்துகொள்ள விரும்பி உருவான இச்சுற்றுலா, வேகமாக வளர்ந்து வரும் இன்றைய பொருளாதார துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

கிணற்றில் வாழும் தவளை போல் ஒரே இடத்தில் வாழ்வது ஒரு போதும் மகிழ்வைத்தராது. மாறாக, பல இடங்களுக்கும் சென்று, புது அனுபவங்களைப் பெறுவதுதான் மனிதர்களாகப் பிறந்ததன் அர்த்தத்தை உணர்த்தும். புதிய இடங்களுக்குச் செல்லும் போதும்,  பல வகையான மனிதர்களை பார்க்கும் போதும், மனிதனுக்கு உடல், உள்ள புத்துணர்ச்சியும் ஆற்றலும் கிடைக்கின்றன. இதனால்தான் நமது முன்னோர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று கொண்டாடும்படியாக இருந்தது. தான் தங்கியிருக்கும் இடம், ஊர், நாடு போன்றவற்றிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு செல்லும் போதும், தன் குடும்பத்தைச் சாராத வேறுமனிதர்களோடு பழகும் போதும், நம்மை அறியாமல் ஒருவிதமான  மகிழ்வை அடைகின்றோம்.

சுற்றுலாவின் முக்கியத்துவம், நாட்டின்  சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பீடுகள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே வளர்ப்பதே இந்த நாளின் நோக்கமாகும். சுற்றுலாக்களின் வழியாக பல்வேறு வழிகளில் பயன் பெறும் ஒரு நாடு, நாட்டின் தேசிய வருவாயை இதன் வழியாக அதிகரித்துக் கொண்டு,  பொருளாதார வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேற்றம் காண்கின்றது. இதனால் நாடுகளுக்கிடையேயும் நாட்டிற்குள்ளேயும்  தோழமை உணர்வு, பன்னாட்டு ஒற்றுமை உணர்வு போன்றவற்றை வளர்த்து இணக்கமான சூழலை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு நாளும்  கடினமாக உழைத்து சோர்ந்து போகின்ற தொழிலாளிக்கு சுற்றுலா இன்பம் தருகின்ற ஒன்றாக அமைந்து, மீண்டும் உழைக்க அதிகமான ஆற்றல் பெற்றுத்தருபவையாகவும் உள்ளது.

ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவுகின்றது. மனிதர்களிடையே  சாதி மதம் இனம் என்று எந்தவொரு வேறுபாடும் பார்க்காது எல்லாரும் பயணிகள் என்னும் உணர்வை ஏற்படுத்தி, மனித நேயத்தையும் நல்லுணர்வையும் வளர்க்கின்றது. எனவே, வாய்ப்புக் கிடைக்கும் போதும், நல்ல வாய்ப்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டும் மனதிற்கு அமைதி தரும் சுற்றுலாப் பயணங்களை  மேற்கொள்வோம். நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளை அழியாமல் பாதுகாக்க, பிறருக்கு எடுத்துரைக்க,   சுற்றுலாத்துறையை மேம்படுத்த, நம்மால் ஆன உதவிகளை செய்ய முன்வருவோம்.

நமது நாட்டை மட்டுமன்று பிற நாட்டின் கலாச்சாரங்களையும் பற்றி அறிந்துகொள்ள பாதுகாக்க  சுற்றுலாக்கள் பல மேற்கொள்வோம். சுற்றுலாத்துறையை வலுப்படுத்த நாம் இருக்கும் இடங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது வரலாற்றையும் நிகழ்வையும் கட்டாயம் கொண்டிருக்கும். அவற்றை பிறருக்கு எடுத்துரைப்பதன் வழியாகவும், பாதுகாத்து பராமரிப்பதன் வழியாகவும் நாம் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தலாம். இதனால் நம் ஒவ்வொருவரின் பண்பாடும் பாரம்பரியமும் அழியாமல் இருக்க நாமும் ஒர முக்கிய பங்கு வகிப்பவர்களாவோம். தொற்று நோய்ப்பரவலின் காரணமாக  சுற்றுலாவை தங்கள் நாட்டின் மிக முக்கியமான துறையாகக் கொண்ட இலங்கை போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.  வேலையின்மை, போதிய வருமானமின்மை, சிறுதொழில், குடிசைத்தொழில், கைவினைப்பொருட்கள் வீழ்ச்சி என பல பிரச்சனைகள் உருவெடுத்து நம்மை துன்பத்தில் ஆழ்த்தின. தொற்றுப் பரவலின் வேகம் தணிந்து  சிறுதொழில்செய்வோர், சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் கொண்டோர்  மெல்ல மெல்ல எழுந்து நிற்க  ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மனதிற்கும் உடலிற்கும் அமைதி தரும் சுற்றுலாக்களை குடும்பமாக குழுக்களாக மேற்கொள்வோம். வாழ்க்கை என்னும் பயணத்தில் சிலர் குடும்ப உறவுகளாக, சிலர் நண்பர்களாக, சிலர் அறிமுகமில்லா மனிதர்களாக,  உடன் பயணிகளாக நம்முடன் ஏராளமானோர்ப் பயணிக்கின்றனர். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதாவதொரு வாழ்க்கைப் பாடத்தை நமக்கு விட்டுச் செல்கின்றனர். நாம் கருவில் உருவாகி குழந்தையாய் பிறந்த முதல் பயணம் முதல் இறந்தவுடன்  கல்லறை நோக்கிச் செல்லும் கடைசி பயணம் வரை அத்தனையும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தருகின்றன என்பதை உணர்ந்து, பயணங்கள் வழியாக படைத்த இறைவனின் கலை உணர்வை கணக்கற்ற அன்பை உணர்ந்து கொள்வோம். வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரும் சுற்றுலாக்கள் பல மேற்கொண்டு சுகமாய் வாழ்வோம்.  அனைவருக்கும் இனிய உலக சுற்றுலா நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2022, 13:15