உயிர்காப்பு உதவித்தேவையில் பாகிஸ்தான் சிறார்.
மெரினா ராஜ் -வத்திக்கான்
தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களில் மக்கள் வசித்து வருவதால், வெயில் மற்றும் குளிரினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் எனவும், நோய்க்கிருமிகளால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு 1 கோடி சிறார்கள் உடனடி உயிர்காப்பு மருத்துவ உதவித்தேவையில் இருக்கின்றனர் எனவும் UNICEF அமைப்பின் தலைவர் அப்துல்லா ஃபாடில் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 இவ்வெள்ளியன்று பாகிஸ்தான் வெள்ள நிவாரண குறித்த தகவல் குறித்து பேசிய UNICEF அமைப்பின் தலைவர் அப்துல்லா ஃபாடில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களின் தேவை குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும், மக்கள் தற்காலிக வீடுகளை அமைத்து இருக்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீரால் ஏற்படும் நோய்க்கிருமிகளால் 1 கோடி சிறார்களுக்கு உடனடி உயிர்காப்பு உதவி தேவைப்படுகின்றது எனவும் எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஏற்கனவே 615 சிறார்கள் உயிரிழந்த நிலையில், இப்போது ஏறக்குறைய 1 கோடி சிறார்கள் உடனடி உயிர்காப்பு உதவித்தேவையில் இருக்கின்றார்கள் எனவும், உடனடியாக செயல்படாவிட்டால் இன்னும் வரும் வாரங்களில் அதிகமான சிறார்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 5,20,000 க்கும் அதிகமான சிறார்களில், ஏறக்குறைய 80,000 பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவசர மருத்துவ உதவியில் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்த அப்துல்லா, வெள்ளத்தால் பாதிக்கப்படும் முன் பாகிஸ்தான் மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடுகளின் சராசரி விகிதம் ஏற்கனவே 50 விழுக்காடாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
55 இலட்சம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர் எனவும், யுனிசெஃப் அமைப்பு ஒவ்வொரு நாளும் 10 இலட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீரை வழங்கினாலும், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நீரைக் குடித்து காலரா, வயிற்றுப்போக்கு, டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொடிய நீரினால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
1 கோடி டாலர் மதிப்புள்ள உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகள், 820,000 மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள், 145 டன்களுக்கும் அதிகமான மனிதாபிமான பொருட்களை பாகிஸ்தான் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி உதவி வரும் யுனிசெப் அமைப்பு, சிறார்களுக்கு 86 நடமாடும் நலப் பிரிவுகள், 226 தற்காலிக கற்றல் மையங்கள் மற்றும் வெள்ள நிவாரண உதவியை மேம்படுத்த இரண்டு மையங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்