இனியது இயற்கை – காற்று மாசுபாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உணவும், நீரும் இல்லாமல்கூட மனிதரால் குறிப்பிட்ட காலம் வரை வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் சில வினாடிகள்கூட வாழ முடியாது. இத்தகைய மகத்துவம் மிக்க காற்றை தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி போன்ற காரணங்களால் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம். இத்தகைய நிலையைத் தடுக்க, காற்றை மாசுபடுத்தும் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்று தூய்மையான காற்றும் அனைவரின் உரிமையாகும்.
நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். ஆனால், மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது. இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனை நிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் எடுத்து, இயற்கையை பாழ்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட நிலங்களாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமியில் அதிக வெப்பம், நிலநடுக்கம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்புதான் மனிதரைப் பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.
தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருந்த காடுகளை அழித்ததன் விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும், எண்ணற்ற தொழிற்சாலைகளின் புகை, வாகனப் புகை என பல வகைகளில் காற்று மாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் நலமின்றி அலைந்து கொண்டிருக்கிறது. காற்று மாசடைவதால், கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், காசநோய், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், உரிய வயது முதிர்வுக்குமுன் இறப்பு போன்றவைகள் அதிகரித்துள்ளன.
வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி, சூழலைப் பாதிக்கின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும். மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை உண்டு ஆக்சிஜனை வெளியிடும் மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது.
வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்! காற்று மாசடைவதை தடுப்போம்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்