தேடுதல்

வறுமையில் வாடும் மக்கள் வாழும் பகுதி வறுமையில் வாடும் மக்கள் வாழும் பகுதி  

வாரம் ஓர் அலசல்- உலக உணவு நாள் மற்றும் உலக வறுமை ஒழிப்பு நாள்

2022 ஆம் ஆண்டு கருப்பொருள் "யாரையும் பின்தள்ளாமல் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்னும் தலைப்பில் கொண்டாடப்படுகின்றது.

மெரினா ராஜ் -வத்திக்கான்

தனியொருவனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாரின் வரிகளுக்கு வலிமை  சேர்க்கும் நாளான  உலக உணவு நாள், நாவிற்கு சுவை தரும் உணவுகளை பற்றி மட்டுமல்லாமல்  சாப்பிட வாய்ப்பின்றி, வழியின்றி, பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் அனைவருக்கும் எடுதுரைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உணவு நாள், உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளின் மிகப்பெரிய பிரச்சனையான பட்டினி,என்னும் சிக்கலை தீர்க்கவும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகின்றது.  பசி இல்லாத சூழலை உருவாக்க தங்களது பங்களிப்பை அளிக்கும்  தனிநபர்களைப் பாராட்டுவதற்கான அடிப்படையில் இந்த ஆண்டு  கருப்பொருள் " யாரையும் பின்தள்ளாமல் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்னும் தலைப்பில் கொண்டாடப்படுகின்றது.

உணவு உற்பத்தி செய்பவர்கள், அதனை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) இந்த நாளை உருவாக்கியது. உணவு நாள் என்பது கட்டாயம் அவசியம் என்று வலியுறுத்தும் வல்லுநர்கள், வரைமுறையின்றி மாறிவரும் உணவுப் பழக்கம், இதனால் மாறும் வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களை நமக்கு சுட்டிக்காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நாள் என்று கூறுகின்றனர். உணவுப்பழக்கத்தை ஒழுக்கத்துடன் கடைபிடிப்பதன் வழியாகவும், ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என குழந்தைகளிடம் வலியுறுத்துவதன் வழியாகவும், வீட்டில் குழந்தைகளுக்கு உணவின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுக்கவும் இந்நாள்  வலியுறுத்துகின்றது.  உணவகங்கள், விசேஷ வீடுகள் போன்ற இடங்களில்  அதிகமாக சமைத்து வீண் செய்வதை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மீதமாகும் உணவுகளை பசியோடு தவிக்கும் மக்களுக்கு தானமாக வழங்கி முடிந்தவரை உணவை வீண் செய்வதை தவிர்க்கலாம் எனவும் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உண்ணும் உணவை வீணாக்காதிருப்போம்.
உண்ணும் உணவை வீணாக்காதிருப்போம்.

பருவகால உணவு :

அந்தந்த பருவகாலங்களில் விளையும்  காய்கறிகள், மற்றும்  பழங்களை சாப்பிடுவதால் உடலுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஏனெனில் அந்தந்த பருவத்தில் விளையும் காய்கறி , பழங்களையும் அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களையும் ஏற்பதற்குரிய தட்பவெப்ப நிலையை   உடலும் மாற்றியமைத்துக் கொள்ளும். சிலர் பருவகாலங்களில் விளையாத காய்கறி பழங்களை  உண்ண விரும்புவதால் அது செயற்கை முறையில் விளைய வைக்கப்படுகின்றது. இயற்கை வளத்திற்கு கேடுவிளைவிக்கும் இச்செயலை தவிர்த்தல் நம் உடல் நலனுக்கு நல்லது. மேலும் சந்தையில் விற்கப்படும்  பல வகையான காய்கறிகள், பழங்கள் பளபளப்பாக, பெரிய பெரிய அளவில் இருக்க வேதியியல் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிட்டத்தட்ட காய்கறிகளின்  கருவிலேயே அதன் இயற்கைத்தன்மை அழிக்கப்பட்டு,  பதப்படுத்தப்பட்ட காய்கறிகளாக விற்கப்படுகின்றன. இதனால் பல உடல் நோய்களும், குறைப்பாடுகளும் ஏற்படுகின்றன.

இதிலிருந்து மீண்டு வர   இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, நாட்டுக் காய்கறிகளை தோட்டத்தில் விவசாயம் செய்து, விற்பனை செய்பவர்களிடத்தில் வாங்கிப் பயனடையலாம். இவற்றை வாங்கி சமைப்பதால் உணவின் சுவைகூடுவதோடு, ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றது. உணவை கடைகளில் வாங்கி சாப்பிடும் முறை உணவில் ஒரு கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு  ஒரு காரணமாகவும் மாறிவிட்டது.  இவை ஆரோக்கியமானதல்ல என்று அறிந்தும் ஆசைக்காகவும் பெருமைக்காகவும் வாங்கி உண்டு உடல் நலனைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக வீட்டில் நம் கைப்பட சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்திக்கொள்ளும் போது, சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) முயற்சியான இந்நாள் உலகளாவிய நிகழ்வு உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் பசி பிரச்சினையை சமாளிக்க மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வலியுறுத்துதலின் படி, உலகெங்கிலும் உள்ள 150 நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹங்கேரிய  நாட்டின்  முன்னாள், விவசாய மற்றும் உணவு அமைச்சர் டாக்டர் பால் ரோமனி பரிந்துரையினால் கொண்டாட தொடங்கப்பட்டது. அதன் பின் படிப்படியாக வளர்ச்சி பெற்று, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, நிலைத்ததன்மை மற்றும் உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வழியாகவும் மாறியது. 2030 ஆம் ஆண்டிற்குள், உலகளாவிய பசியைக் கையாண்டு, உலகம் முழுவதும் பசியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக  வறுமை ஒழிப்பு நாள்,வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும்  எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி  ஐக்கிய நாடுகள் அவையால் கொண்டுவரப்பட்டது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளி உள்ளதாகவும் தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் பெரும்பான்மையினர் ஏழைகளாக மாறியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள்நிறுவனத்தின் பொதுச் செயலாளரான அந்தோனியோ கூட்டரஸ் அவர்கள், "தற்போது தீவிரமாக அதிகரித்து வரும் வறுமை, கொரோனா தொற்றுப் பரவலினால் நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவையும் ஏற்படுத்திவருகின்றது என்று தெரிவித்துள்ளார். உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு  இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ள இவ்வறுமையால் பலரும் துன்புறுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

வறுமையினால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் பற்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைக்க, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படும்  வறுமை ஒழிப்பு நாளில், பல்வேறு செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக்குப் பலியானோரை நினைவுகூறும் வகையில் 1,00,000 மக்கள்  பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக  ஒன்றுகூடினார்கள். வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும்.  வறுமையினால் ஏற்படும் வலி, துன்பத்தினால்  வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கருத்தப்படுவதால்,  சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை  ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றன.  தனிப்பட்டவர்கள்  மற்றும் குழுக்களைப் பாதிக்கும்  வறுமை  வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளிலும், வீடின்மை வேலையின்மை, அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படாமை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவும் அமைகின்றது.

ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதை அதாவது, மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை முற்றிலும் வறுமையில் இருப்பவர்கள் என்றும், இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்படுவதை ஒப்பீட்டு வறுமை என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால், இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமையும் காணப்படுகிறது.

பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்
பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

வறுமையின் விளைவுகள்.

வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடையும்போது ‘வறுமை ஒழிப்பு’ நிச்சயம் நிறைவேறும்  ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பதற்கேற்ப வாழ்வியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் வறுமை, பொருளாதார ரீதியான தட்டுப்பாட்டைக் கொண்டு மட்டும்  வரையறுக்கப்படுவதில்லை. வறுமை நிலை என்பது உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், அடிப்படையான மனித அரசியல் உரிமைகள் ஆகிய நிலைகளை உள்ளடக்கியது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிக் கொடுமையில் இருந்து  மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதியை ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ அறிவித்தது.  மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு வளர்ச்சிக்கான  இலக்கையும் நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் ‘உலக வறுமை ஒழிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமான செயல்பாடாக வறுமை ஒழிப்பு என்பது கட்டாயம்  செயல்படுத்தப்படவேண்டியது.  ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்த்து . கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடைந்து ‘வறுமை ஒழிப்பினை  திட்டமிட்டு செயல்படுத்துவோம். பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக மாற்ற நம்மாலான முயற்சிகளை எடுப்போம். அடுத்த தலைமுறைக்கு வறுமையிலிருந்து மீண்டு வந்த ஓர் உன்னதமான சூழலைப் பரிசளிப்போம். அனைவருக்கும் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாக்க உணவு இழப்பு மற்றும் வீணடித்தலின் தீமை குறித்து அனைவரும் கவனம் செலுத்த,வலியுறுத்தும்  திருத்தந்தை பிரான்ஸிஸ் அவர்களின் வேண்டுகோளின்படி  வாழ முயற்சிப்போம் . அனைவருக்கும் உலக உணவு நாள் மற்றும் வறுமை ஒழிப்பு நாள் நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2022, 12:14