தேடுதல்

1658211457189.jpg

வாரம் ஓர் அலசல்- உலக சிக்கன நாள் மற்றும் உலக சேமிப்பு நாள்

பணம் மட்டுமல்ல மழை நீர், குடிநீர், மின்சாரம், எரிசக்தி என எல்லாவற்றிலும் சேமிப்பும் சிக்கனமும் மிக அவசியமாகி விட்டது. சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படையமுடியும் என்பது உண்மை.

மெரினா ராஜ் -வத்திக்கான்

சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும் என்ற முதுமொழிக்கேற்ப தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தைத் தன் குடும்பத்திற்கும் ,நாட்டுக்கும் பயன்படும் வகையில் ஒவ்வொரு மனிதனும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமிக்கும் பழக்கத்தினை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி உலக சிக்கன நாளும் 31 ஆம் தேதி உலக சேமிப்பு நாளும் கொண்டாடப்படுகின்றது. எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாகத் திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இந்நாள் வலியுறுத்துகின்றது.

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த

சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ 

என்ற திருவள்ளுவரின் குறள் வரிகள், தனது சொத்துகளைப் பாதுகாத்து, தனது கணவனின் சொத்துக்களை வளர்த்து, குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செய்பவளே நல்ல குடும்பதலைவி என்று எடுத்துரைக்கின்றது. குடும்பத் தலைவி மட்டுமன்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சிக்கனம் மற்றும் சேமிப்பின் பயன் அறிந்து வாழும் போது தான் வாழ்க்கை வளமாக மாறுகின்றது. சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு என்பதை உணர்ந்து சேமிப்பை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ‘சிறுதுரும்பும் பல் குத்த உதவும்” என்ற பழமொழிக்கேற்ப, சேமிக்கும் சிறிய தொகை குழந்தைகளின் சிறுசிறு தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஒன்று, ஐந்து, பத்து என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விரைவில் உணர்த்தி இன்னும் அதிகமாக சேமிப்பதற்கான ஆர்வத்தையும் தூண்டுகின்றது.

உலக சேமிப்பு நாள் வரலாறு

பிலிப்போ ரவிசா என்ற இத்தாலிய பேராசிரியர் 1924 ஆம் ஆண்டு  இத்தாலியின் மிலான் நகரில்  நடைபெற்ற முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி காங்கிரஸின் கடைசி நாளை சர்வதேச சேமிப்பு நாள்  என்று அறிவித்தார். உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் உலக சிக்கன நாள் மற்றும் உலக சேமிப்பு நாள் கொண்டாப்பட வேண்டும் எனவும், இந்நாளில் சேமிப்பு, சிக்கனம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் பிரபலமான இந்நாள் மக்கள் தங்கள் பணத்தை மெத்தையின் அடியில் வைப்பதை விட வங்கியில் வைப்பது நல்லது என்பதை வலியுறுத்தி, உலக நாடுகள் அனைத்தும் உலக சேமிப்பு நாளைக் கொண்டாடக் காரணமாகவும் அமைந்தது. பொருளாதார வளர்ச்சியை  அடைவதற்காக  சிக்கனம், மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, "இன்றைய சேமிப்பு,  நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதையும் இந்நாள் உணர்த்துகின்றது.

அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்காலப் பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதற்காகவும் சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும் கொண்டாடப்படும் இந்நாள்,  சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரைஇல்லாத வீட்டுக்கு சமம் என்பதனையும் எடுத்துரைக்கின்றது. சேமிப்பின் அவசியத்தை,சேமிப்பு பற்றிய விழிப்புணர்வைக்   கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்ட, ஊரடங்கின் போது   அதிகமாக உணர்ந்து கொண்ட நாம், இதுபோன்ற சூழல் மீண்டும் நிகழாமல் இருக்க வலியுறுத்தப்படுகின்றோம். ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வருமானத்தில் குறைந்தது 10 விழுக்காட்டையாவது கட்டாயம் சேமிக்கும் பொழுது, எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளின் போது அச்சேமிப்பு நமக்கு கைகொடுத்து உதவுகின்றது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் வரவு செலவுகளை திட்டமிட்டு சிக்கனமாக செயல்படும்போது, அதிகமாக சேமிக்க முடிவதோடு,  குழந்தைகளும், சேமிப்பின் அவசியத்தை உணர்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை  சொல்லிக் கொடுத்து உண்டியலில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் பொழுது,  சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையின் அடிப்படைக்கூறுகளாக மாறுகின்றன. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வதால் மட்டுமே, பொருளாதார ரீதியில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை சிறு வயதிலிருந்தே அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள். சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிறப்பிக்கப்படும் இந்நாட்கள், “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்னும் குறள் வழியாக இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது என்பதையும் எடுத்துரைக்கின்றன.

நான்கு நிலைகள்

கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம்  என்னும் நான்கு விதமான நிலைகள் நாம் யார் என்பதை வெளிப்படுத்திவிடுகின்றன.  கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச்செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல், வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் அதிகமாகும் போது, மனிதன் தன் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகின்றது. சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. தேனீ,தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுகளைக் கட்டியெழுப்பி உணவுசேமிப்பதும், மழையின்போது அருவிநீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பலவிதங்களில்  அவனுக்கு உதவுகின்றது. ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக,  நடை,உடை, பாவனைகளில் மெருகேற்றி வெளித் தோற்றத்துக்காக,  தம்மை பணம், பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக வீண் செலவு செய்வது. ஊதாரித்தனம் என்பது எவ்விதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை, போதுமென்ற மனம்.  செலவுகளை  நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்தால்  எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் அவற்றை நாம் ஒவ்வொன்றாக இழந்துவிட நேரிடும். உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி, கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், கடன்  பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும்  என்று அழகாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. எதிர்காலச் செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகளான குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என்பன போன்ற பல தேவைகள் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி முன்னேறிச் செல்ல வழிவகுக்கின்றது. சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் மட்டுமல்ல மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் சேமிப்பும் சிக்கனமும் மிக அவசியமாகி விட்டது.  சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படையமுடியும் என்பது உண்மை.

அன்றாட வாழ்வில் பணத்தை எப்படியெல்லாம் சேமிக்கலாம்?

உலகம் முழுவதும் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடைபிடிக்கப்படும் உலக சேமிப்பு நாள் ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் முறையில் பழகும்போது, பணம் தேவையில்லாமல் எங்கு அதிகமாக செலவாகின்றது, அதை எப்படி தடுக்கலாம் என தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றவர்களிடம் ஒரு பொருள் இருக்கிறது என்பதைப் பார்க்காமல், நமக்கு ஒரு பொருள் நிஜமாகவே தேவையா, அதனால் பயன் கிடைக்குமா என்பதை சிந்தித்துசெலவு செய்ய வேண்டும். பணத்தை செலவு செய்யும்போது அதிகமான மகிழ்ச்சி, பேராசை, பதற்றம், கவலை போன்ற உணர்ச்சிச் சூழல்களில் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பணத்தில் மீதமுள்ளதை சேமிப்பதல்ல மாறாக  ஒவ்வொரு மாதமும் வருமானம் வந்தபின் அதில் நல்லதொரு தொகையை முதலில் சேமித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை செலவு செய்ய வேண்டுமென்பதே நிபுணர்களின் அறிவுரை.   நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது.  பொருளாதார நோக்கம் கொண்ட நிகழ்காலத்தில் எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்தி, அதனைப்  பழக்கமாக்கிக் கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி அன்றாட வரவு -செலவுக் கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால்,குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிந்து,  அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.  மேலும்  குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரியும் பொழுது அவர்களது பொருளாதார அறிவு வளர்ந்து,  சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராகின்றார்கள்.  இரண்டாவது, பலநேரங்களில் ஏற்படும் பயனற்ற செலவுகளைக் கண்டறிந்து நீக்க உதவுகின்றது. தனிநபர் சேமிப்பை அதிகமாகக் கொண்ட மக்கள் உள்ள நாடுகளாக , ஸ்லோவேனியா, எஸ்டோனியா, அயர்லாந்து, ஹங்கேரி, தென்கொரியா,நெதர்லாந்து, ஜெர்மனி,ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க்,போன்றவைகள் திகழ்கின்றன. தனிப்பட்ட நிதி நிலைத்தன்மை தவிர,சேமிப்பு முழு பொருளாதாரத்திற்கும் உதவுகின்றது.  தனிப்பட்ட சேமிப்பு விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகின்றது. உலகக் கடனின் அளவைக் குறைக்கவும் சேமிப்பு உதவுகிறது.

உலக சேமிப்பு தினத்தை எப்படி கடைபிடிப்பது

வங்கிகள், கடன் கொடுக்கும் அமைப்புக்கள்  மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் இந்த நாளில் பணத்தைச் சேமிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்துகின்றன.அவர்களில் பலர் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு இலவச பரிசுகளை வழங்கியும், சேமிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் பயிற்சிப்பட்டறைகளையும் நடத்துகின்றார்கள். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள்பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து உற்சாகப்படுத்த வேண்டும். இதன் வழியாக  சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவுகின்றது. மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அத்தொகைக்கு உறுதியும் எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கின்றது. சிறு துளி பெரு வெள்ளம்; என்பதற்கேற்ப  ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்து, சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்பதை உணர்வோம் சிக்கனம் தேவை இக்கனம் என்பதை மனதில் இருத்தி சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்களாக வாழ முயற்சிப்போம் அனைவருக்கும் இனிய உலக சிக்க நாள் மற்றும் சேமிப்பு நாள் நல்வாழ்த்துக்கள் . மேலும் நீங்கள் மண்ணுலகிற்கு ஒளிஒயாய் இருக்கின்றீர்கள் என்னும் இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப ஒளியின் மக்களாக திகழ  ஒளியின் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2022, 12:30