தேடுதல்

நீதி தேவதை நீதி தேவதை 

கரீபியன் பகுதியில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு

இன்றைய நிலவரப்படி 170 நாடுகள், சட்டத்தில் அல்லது நடைமுறையில் மரண தண்டனையை இரத்து செய்துள்ளன அல்லது அதற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அனைவருக்கும் மாண்பு, சுதந்திரம், மற்றும், நீதி என்ற தலைப்பில், டிசம்பர் 10, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக மனித உரிமைகள் நாளன்று, மரண தண்டனை சட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றை இரத்துசெய்யுமாறு கரீபியன் பகுதி மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இவ்வாறு விண்ணப்பித்துள்ள மனித வாழ்வுக்கு ஆதரவான கரீபியன் பகுதி ஆர்வலர்கள் அமைப்பு (GCL), மரண தண்டனையை நிறைவேற்றுதல், குற்றவாளிகளின் மனித மாண்பை ஊக்குவிப்பதோடு ஒத்திணங்கிச் செல்லவில்லை என்று கூறியுள்ளது.

சமுதாயம், கடும் குற்றவாளிகளின் மனித மாண்பைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது, அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் போதுமானது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதை நாம் ஊக்குவிக்க விரும்பினால், மனிதர் வாழ்வதற்கான உரிமையையும், சித்ரவதை, மனிதமற்ற கொடூரமான முறையில் நடத்தப்படுவது அல்லது தண்டனை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் இருக்கும் உரிமையையும் மரண தண்டனை மீறுகிறது என்பதை உணரவேண்டும்  என்று அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

இன்றைய நிலவரப்படி 170 நாடுகள், சட்டத்தில் அல்லது நடைமுறையில் மரண தண்டனையை இரத்து செய்துள்ளன அல்லது அதற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளன.    

ஆயினும் இத்தண்டனையை நிறைவேற்றும் நாடுகளும் உள்ளன. 2021ஆம் ஆண்டில் சீனா, ஈரான், சவுதி அரேபியா, மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2022, 14:20