இனியது இயற்கை - வெள்ளி (வீனஸ்)
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சூரியக் குடும்பத்தில் சூரியனுடன் தூர நெருக்கத்தைப் பொறுத்தவரையில் இது இரண்டாம் கோள். மிகவும் வெப்பமான கோள். ஏனெனில், இக்கோளில் நிறைந்துள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயு, சூரியனின் வெப்பத்தை அதிக அளவில் உள்வாங்கிக் கொள்கிறது. இது பூமிக்கு மிக அருகில் உள்ள கோள். இரவில் அதிக அளவில் ஒளி வீசும் கோள் வெள்ளிதான். இதனை காலை விண்மீன் என்றும் மாலை விண்மீன் என்றும் அழைப்பர்.
அதன் அடர்த்தி, நிறை புவியைப் போன்றது. இதனால் வெள்ளிக் கோளை புவியின் ‘சகோதரிக் கோள்’ (Earth's Twin) என்கிறோம். இது சூரியனை அடுத்து பிரகாசமாகத் தெரிவது. தன்னைத் தானே சுற்ற 243 நாட்கள், சூரியனைச் சுற்ற 224.5 நாட்கள். கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது. இதற்கு துணைக்கோள்கள் இல்லை. கிழக்கு மேற்காக சுழலும் இன்னொரு கோள் யுரேனஸ் ஆகும்.
சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கோள் வெள்ளி (அதன் மேற்பரப்பின் வெப்பம் 460° செல்சியஸுக்கும் மேலே), ஆகவே, உயிர் வாழ்வதற்கான சாத்தியம் அங்கு இல்லை என்று சொல்லிவரும் கூற்றை மறுக்க இப்போது புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அண்மையில் வெள்ளியின் வளிமண்டலத்தில் ஃபாஸ்ஃபீன் வாயுவின் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது புவியைத் தவிர ஏனையக் கோள்களில் உயிர்வாழ்க்கைக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்ற தேடலுக்குப் புதிய உந்துதல் தந்திருக்கிறது. வெள்ளியின் வளிமண்டலத்தில் நேரடியாகச் செய்யும் ஆய்வுகள் மூலமாக மட்டுமே இதை மேற்கொண்டு உறுதிப்படுத்த முடியும்.
நாசா கோடாட் விண்வெளி கல்லூரி ஆய்வாளர்கள் மேற்கொண்ட கணணி ஆய்வில் வெள்ளிக் கோளின் ஆரம்ப காலத்தில் 2 பில்லியன் ஆண்டு காலத்திற்கு அதன் ஒளிமறைவுப் பகுதிகளில் கடல் நீர் இருந்ததாகவும், உயிரினங்கள் வாழத் தகுதியான சூழல் இருந்ததாகவும் கணித்துள்ளனர். இதன் காற்று வெளிமண்டலம் மிகவும் அடர்த்தியானது. இதன் அடத்தியால் அதிக வெப்பம் உட்கிரகிக்கப்பட்டு அதிக வெப்பம் கொண்ட கோளாகத் திகழ்கிறது. இதன் மேற்பரப்பு வெப்பம் ஈயத்தைக்கூட உருக வைத்துவிடும். இங்கு எரிமலைகளும், உருக்குலைந்த மலைகளும் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்