ஆப்கானில் பசியின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்டு பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களின் பணிகளைத் தொடங்குவதற்கு ஆப்கானின் தலிபான் அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது Save the Children என்ற பன்னாட்டு அமைப்பு
ஆப்கான் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் இருவர், அல்லது 2 கோடியே 80 இலட்சம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உயிர்வாழ்வதற்கான அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது Save the Children என்ற பன்னாட்டு அமைப்பு
ஆப்கான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் (NGO) பணிபுரிவதைத் தடைசெய்து தலிபான்கள் ஆணை பிறப்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பல பெண்களும் குழந்தைகளும் நாட்டின் மிகவும் மோசமாக பசி நெருக்கடியை எதிர்கொள்வதால், உயிர்காக்கும் உதவிகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தடையின் விளைவாக, கைம்பெண்கள் மற்றும் தனியாக வாழும் பெண்கள் உதவியைப் பெற முடியாமல் இருப்பதாகவும், தங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு ஆண் குடும்ப உறுப்பினர் இல்லாததால் அப்பெண்களின் துயரம் அதிகரித்துள்ளதாகவும், வேறு ஆண்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு பண்பாட்டு நெறிமுறைகள் மற்றும் மரபுகள் அவர்களைத் தடைசெய்கின்றன என்றும் தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான தடை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும், பொருள்களை வழங்குவதற்குப் பெண்கள் அவசியம் தேவை என்றும், அவர்கள் இல்லாவிட்டால், இலட்சக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் உயிர்காக்கும் உதவிகள் கிடைக்காமல் துயருறுவார்கள் என்று தாங்கள் தொடக்கத்திலிருந்தே அறிவுறுத்தி வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார் இவ்வமைப்பின் இயக்குநர் David Wright
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்