ஆப்கானில் பெண்கள் உதவியின்றி பணிகளாற்ற முடியாது
செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்
ஆப்கானில் பெண்கள் படிப்பதற்கும், இளம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது என்றும், இந்நிலை, அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதையே காட்டுகின்றது என்றும் கூறியுள்ளார் ஜெர்மனிக்கான அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் Oliver Müller.
ஆப்கானுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்று திரும்பியுள்ள வேளை, வத்திக்கான் செய்திக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள Müller அவர்கள், ஆப்கான் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவது தனக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானில், 2 கோடியே 8 இலட்சம் மக்கள் வெளிப்புற உதவியை நம்பியுள்ளனர் என்றும், உடனடி உதவிகள் பெரும் நிலையில்தான் அம்மக்களின் தற்போதைய நிலைமை இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Müller.
ஆப்கானில் பெண்களின் உதவியின்றி பணிகளாற்ற முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், இப்படிப்பட்ட நெருக்கடியான வேளையில் எப்படி பணிகளைத் தொடர்ந்தாற்றுவது என்பதைக் குறித்து அறிந்துகொள்ளும் விதமாகவே அங்குத் தனது பயணம் நிகழ்ந்தது என்றும் எடுத்துரைத்துள்ளார் Müller.
அனைத்துலக ஆய்வின்படி, ஆப்கான்தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் கவலையளிக்கும் நாடாக இருக்கின்றது என்றும் பெண்கள் பொது வாழ்வில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நேர்காணலின்போது கோடிட்டுக் காட்டியுள்ளார் Müller.
ஆப்கானின் தலைநகர் காபூலில், பெண்கள் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கிவர மட்டுமே தெருக்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், ஆனால் அதேவேளையில், நாடு முழுவதிலும் உள்ள பல நகரங்களில், பெண்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பெரிதும் கவலை தெரிவித்துள்ளார் Müller.
ஆப்கான் நமது ஆதரவையும் உதவியையும் பெறுவதற்குத் தகுதியான நாடு என்றும், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஏழ்மையான நாடுகளில் இதுவும் ஒன்று என்றும் சுட்டிக்காட்டியுள்ள Müller அவர்கள், இந்தக் காரணத்திற்காகவே, இங்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்ற விரும்புகின்றோம் என்றும், ஜெர்மனியின் காரித்தாஸ் அமைப்பு 1984-ஆம் ஆண்டு முதல் ஆப்கானில் பணியாற்றி வருவதுடன், பல்வேறு மனிதாபிமான திட்டங்கள் வழியாக, இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகள வழங்குகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்