நேர்காணல் - சமூக நீதி சமமான நீதி
மெரினா ராஜ் - வத்திக்கான்
சமூக நீதி” என்ற சொற்றொடர் 1780ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்துறை புரட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்க சட்ட அறிஞர்கள் இந்த வார்த்தையை பொருளாதாரத்தில் பயன்படுத்தினர். இன்று அதன் பயன்பாடு உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் விரிவடைந்துள்ளது. சமூக நீதி என்பது சமூகத்தின் பல நிலைகளில் நியாயத்தையும் சமத்துவத்தையும், சமமான பொருளாதாரம், கல்வி மற்றும் பணியிட வாய்ப்புக்களில் ஊக்குவிக்கின்றது. சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் சமூக நீதியானது, இனம், வர்க்கம், சாதி, பாலினம் போன்றவற்றில் கடைபிடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகவும் இது கருதப்படுகின்றது.
சமூக நீதி என்பது சமூகத்தில் வளங்கள், வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் நியாயமான மற்றும் சமமான பிரிவைக் குறிக்கிறது. நீதி என்பது நியாயத்தின் கருத்து ஆகும். சமூக நீதி என்பது சமூகத்தில் வெளிப்படும் நியாயம் ஆகும். அதில் சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடு போன்ற பலவற்றில் நேர்மையும் அடங்கும். சமூக நீதியுள்ள சமூகத்தில், மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன. பாகுபாடுகள் வளர அனுமதிக்கப்படுவதில்லை.
“சமூக நீதியின் கொள்கைகள்
சமூக நீதி சமூகத்தில் கடைபிடிக்கப்பட மனித உரிமைகள், அணுகல், பங்கேற்பு சமத்துவம் என்னும் நான்கு தூண்கள் கட்டப்பட வேண்டும். இந்த நான்கு கோட்பாடுகள் இல்லாமல் சமூக நீதியை அடைய முடியாது. இவை நான்கிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் போது சமூக நீதியுள்ள சமுதாயம் சாத்தியமாகும். சமூக நீதிக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான தொடர்பு பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகின்றது. பலர் “சமூக நீதி” மற்றும் “மனித உரிமைகள்” ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒன்று இல்லாமல் மற்றொன்று செழிக்க முடியாது என்பதே உண்மை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சமூக நீதி பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி புஷ்பநாதன். கரூரை சொந்த ஊராகக் கொண்ட அருள்பணி புஷ்ப நாதன் அவர்கள், கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளராவார். சென்னை திருஇருதயக் கல்லூரியில் தத்துவவியலையும் கோயம்புத்தூர் நல்லாயன் கல்லூரியில் இறையியலையும் படித்தவர். கனிந்த அன்பில் பணிந்த வாழ்வு என்னும் விருதுவாக்கோடு கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்று, மறைமாவட்டத்தின் பல பங்குத்தளங்களிலும், மேய்ப்புப்பணி நிலையங்களிலும் பணியாற்றியவர். தற்போது, ஈரோட்டில் உள்ள, மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கான மையமான, CEEMAவின் இயக்குனராக செயலாற்றுகின்றார்.
குழந்தைகளின் கல்வி, பெண்கள் சுயஉதவி குழுக்கள், இளையோர், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான பணிகள், சுகாதார துறை வளர்ச்சிக்கான பணிகள், புற்றுநோய் விழிப்புணர்வு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்து வருகின்றார். குறிப்பாக கோவிட்-19 என்னும் தொற்று நோய்ப்பரவலின் போது விழிப்புணர்வு வழியாகவும் தாராள நன்கொடையாளர்களின் அடிப்படைப்பொருள்கள் வழியாகவும், பலருக்கு கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தியவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்