காசாவில் நிகழும் மோதல்கள் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசா பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகரித்து வரும் வன்முறைகள் மீண்டும் குழந்தைகளின் வாழ்க்கையைப் பேரழிவிற்கு உட்படுத்தி வருகிறது என்று தனது ஆழந்த கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார் UNICEF நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell.
மே 9, இச்செவ்வாய் முதல் காசா பகுதியில் இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் ஆயத மோதல்களால் ஏறக்குறைய ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள வேளை, 36 பேர் காயமடைந்துள்ளனர் என்று மே 14, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார் Russell.
40 கி.மீ சுற்றளவில் உள்ள இஸ்ரேலில் உள்ளதைப் போலவே காசா பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன என்றும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலை தெரிவித்துள்ளார் Russell.
காசா பகுதியில் உள்ள நீர் மற்றும் சுகாதார அமைப்புகளில் எரிபொருள் தீர்ந்துவிட்ட நிலையில் அவைகள் பாதி அளவே இயங்குகின்றன என்றும், குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக காயமடைந்தவர்களுக்கும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் ஓரளவிற்கே நிலைமையை சமாளித்து வருகின்றன என்றும் மேலும் கூறியுள்ளார் Russell.
பல ஆண்டுகளாக, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளிலுள்ள குழந்தைகள் அளவற்ற விரோதப் போக்கைச் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர்களில் பலர் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றும் கூறியுள்ளார் Russell.
இங்குள்ள குழந்தைகள் கொடூரமான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இது அவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வில் கணக்கிட முடியாத அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் விளக்கியுள்ள Russell, இதனால் அதிக குழந்தைகளை இழக்கவேண்டிய ஆபத்தான சூழலுக்கு நிரந்தரமாகத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Russell.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்