மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் வேண்டுகோள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வன்முறையின் இடமாக மாறிவரும் மணிப்பூர் சமூக சூழ்நிலையில், ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனம் குறைந்து வருவதாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் பரவி வாழ்கின்ற பல்வேறு இந்தியமாணவர்களும் மணிப்பூரில் அமைதிநிலவ தங்கள் வேண்டுகோள்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் மணிப்பூரில் உள்ள "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பல்சமய மன்றத்தில்" மனிதகுலம் காப்போம், மனித உயிரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் அமைதிக்காக ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி செபித்தனர்.
மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடந்து வரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மோதலில் இரு இனக்குழுக்களுக்கு இடையே உரையாடலைத் தொடங்கவும் கேட்டுக்கொண்ட இளைஞர்கள், Meitei மற்றும் Kuki இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களை நிறுத்தவும் வலியுறுத்தினர்.
பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூகஊடக நிகழ்வுகளில் "மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்!" என்ற முழக்கத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் போராடி வரும் நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்காக தங்கள் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படுத்திய மாணவர்கள், மணிப்பூர் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், நிலையான அமைதியை விரும்பியும் செபம் மற்றும் அமைதி ஊர்வலங்களில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புக்களுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு மத மற்றும் இன சமூகங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்த்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சார்ந்த ஐந்து அரசியல் தலைவர்கள் பங்கேற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
வயது மற்றும் பாலின வேறுபாடின்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை கொண்ட இந்திய குடிமக்கள் என்றும், வெவ்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களில் மனிதநேயத்தின் அடிப்படை மதிப்புகளைக் கொண்டு வர முயற்சிப்பவர்கள் என்றும் எடுத்துரைத்தார் இந்து, கிறிஸ்தவ, புத்த, முஸ்லீம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு பிரதிநிதிகளை உள்ளடக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டெபன் பச்சஸ்பதிமாயும்.
"மணிப்பூரில் நடந்து வரும் உள்ளூர் பழங்குடியினருக்கு இடையிலான மோதலில். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெற்றோர், குழந்தைகள இளையோர் முதியோர் என பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவர்கள் மணிப்பூருக்குச் சென்று மக்களின் துயரங்களை நேரில் அனுபவிக்கவும், வேதனையைத் தணிக்கவும், மோதலில் அமைதி நிலவவும் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்