உக்ரைனின் லிவிவ் குண்டுவெடிப்பிற்கு யுனெஸ்கோ கண்டனம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பண்பாட்டு மையமான லிவிவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிற்கு தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.
ஜூலை 6 வியாழக்கிழமை உக்ரைன் நாட்டின் 773ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரமும் கலாச்சார பண்பாட்டு நகரமுமான லிவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் 5 பேர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து செய்தியை வெளியிட்டுள்ளது யுனெஸ்கோ அமைப்பு.
2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போர் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் வேளையில் உலக பாரம்பரிய மாநாட்டால் பாதுகாக்கப்பட்ட பகுதியான லீவிவ்இல் நடந்த தாக்குதல், 1954ஆம் ஆண்டு கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஹாக் மாநாட்டை மீறுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
உலக பாரம்பரிய தளங்களுக்கான கூடுதல் பாதுகாப்பு அடுக்காகத் திகழும் சுற்றுச்சூழல் நிறைந்த பகுதிகள் போரினால் அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ள யுனெஸ்கோ அமைப்பு, உலகின் பாரம்பரிய, பண்பாட்டு, கலாச்சாரப்பகுதிகள், அதன் எல்லைகள் உலக பாரம்பரியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படல், மாநிலக் கட்சிகள் கலாச்சார சொத்துக்களுக்கு எதிரான விரோதச் செயலிலிருந்து விலகி இருத்தல் போன்ற 1954ஆம் ஆண்டு ஹாக் மாநாட்டின் அறிக்கையை நினைவுகூர்ந்துள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுனெஸ்கோவின் இயக்குனரான ஆட்ரி அசோலே, இரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சருக்கு இந்தக் கடமைகளை நினைவூட்டவும், உக்ரைனில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் ஒருங்கிணைப்புகளைக் குறிப்பிடவும் ஒரு கடிதம் அனுப்பியதையும் எடுத்துரைத்துள்ளது அவ்வமைப்பு.
இலக்கியத்திற்கான யுனெஸ்கோ படைப்பு நகரமாகவும் யுனெஸ்கோ கலாச்சார மையத்தை நடத்தும் இடமாகவும், உக்ரேனிய கலைஞர்களுக்கான தேசிய மையமாகவும் இருக்கும் லிவிவ், போரினால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்த யுனெஸ்கோ அமைப்பு, போர் தொடங்கியதில் இருந்து, 260க்கும் மேற்பட்ட உக்ரேனிய கலாச்சார சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதையும் எடுத்துரைத்துள்ளது.
வான்வழி தாக்குதல் சப்தங்கள் தொடர்ந்து நகரில் கேட்பதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியை குறிவைத்து இரஷ்யாவினால் ஏவப்பட்ட நான்கு கப்பல் ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்