தேடுதல்

கோடைவெயிலில் கடற்கரை கோடைவெயிலில் கடற்கரை  

வாரம் ஓர் அலசல் – கோடைகாலத் தகவல்கள்

ஏப்ரல், மே, சூன் மற்றும் சூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியான அதிக சூரிய ஒளி பூமியில்படுவதால் வெப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வெயில் அதிகம் என புலம்பும் மனிதன் ஏனோ மரம் குறைவு என எண்ண நினைப்பதில்லை. நல்ல நிழலையும் சுத்தமான காற்றையும் தந்து கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் மரங்களை நாம் நட வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் போதும், கோடை வெப்பத்தை  நம்மால் குறைக்க முடியும். பருவ நிலைகள் மாற்றம் அடைந்து அதிக மழை, அதிக வெப்பம், அதிக குளிர் என்று, நாம் வாழ்கின்ற இப்பூமிப்பந்தானது மாற்றமடைந்து கொண்டிருக்கும் வேளையில் நமது முன்னோர்கள் நமக்குக் கற்பித்த வழிமுறைகளைப் பின்பற்றி கோடை வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியான அதிக சூரிய ஒளி பூமியில் படுகிறது. இந்தியாவில் கோடை காலம் சற்றே தணிந்து இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தான் கோடைகால வெப்பம் துவங்க ஆரம்பித்துள்ளது.  மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான கோடைக்காலத்திற்கான குறிப்புகள் சிலவற்றை இன்றைய நம் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் காணலாம்.

வழக்கத்தை விட அதிகமான வெப்பத்துடனும், இரவு நேரம் குறைவாகவும் பகல்நேரம் அதிகமாகவும் காணப்படும் காலமே கோடை காலம் எனப்படுகின்றது. கோடைகாலத்தில், உடலில் வியர்வை அதிகரிப்பதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றன. இதனால் வெப்ப பக்கவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மூளை பாதிக்கப்படுகின்றது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் குறைவுபட்டு, அம்மை, வயிற்றுப்போக்கு, மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வெயிலினால் கோடைகாலத்தில் ஏற்படுகின்றன.

கோடைகாலத்தில் வெள்ளை நிற உடைகள் அணிவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகின்றது ஏனெனில் வெள்ளை நிறம், வெயிலின் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. அடர்நிற உடைகளான கருப்பு சிவப்பு போன்ற உடைகள் வெப்பத்தை உள்ளிழுத்து நம் உடலை அதிகமாகப் பாதிக்கின்றன. நாள் ஒன்றிற்கு இரண்டு முதல் 3 லிட்டர் வரை நீர் அருந்துதல், இருமுறை குளிர்ந்த நீரீல் குளித்தல் போன்றவைகளால் நாம் கோடைகால பாதிப்புக்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கலாம்     

அதிக தண்ணீர் தாகம், வறண்ட தோல், உதடுகளில் பிளவு, நாக்கு வறட்சி, பேசும்போது உளறல், வலிப்பு, வயிற்று வலி, தலை வலி, தலை சுற்றல், நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறு, படபடப்பு போன்றவை வெயிலின் தாக்கத்தினால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்களாகும். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் Heat Stroke எனப்படும் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து வெயிலினால் ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஏற்படும் பாதிப்பே ஹீட் ஸ்ட்ரோக் என்னும் வெப்பத்தினால் ஏற்படும் பக்கவாதமாகும். மனிதர்களின் உடல்நிலை இயல்பாக 98.6 டிகிரி ஃபாரான்ஹீட் அல்லது 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று, அதிக நேரம் வெயிலில் இருப்பதால் இந்த உடல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து 104 டிகிரி ஃபாரான்ஹீட்டுக்கு மேல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. வழக்கமாக காய்ச்சல் ஏற்படும் போது அதிகரிக்கும் உடலின் வெப்பநிலை, அதற்கான மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது சமநிலையடைந்து வியர்த்து வியர்வை வெளியேறி தணிக்கப்படுகின்றது.

சிலருக்கு வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வெளியேறாமல், மற்றும் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போவதால், உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுகின்றது. இது நமது உடலில் ஏற்படுவதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். உடல் வெப்பநிலை  வழக்கத்தை விட அதிகமாதல், வறட்சி, நா குளறல், மயக்கம், தலைசுற்றல் போன்றவை இதன் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. மயக்கமடையும் நபர் சில நேரங்களில் கோமா நிலைக்குச் செல்லும் அபாயமும் உள்ளது. 

உடலின் வெப்ப நிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டும் போது தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. எனவே வெயிலில் அதிக நேரம் இருக்கும் நபர் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பின் அறிகுறிகள் தெரியவந்தவுடன் உடனடியாக வெயிலில் இருந்து நிழலான பகுதிக்குச் செல்ல வேண்டும். குளிரூட்டிகள் மின்விசிறிகள் போன்றவற்றால் உடலின் வெப்பத்தை இயல்பான நிலைக்கு மாற்ற முயலவேண்டும். உடலில் தலை, மார்பு, இடுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த நீர் அல்லது பனிக்கட்டிகளில் தோய்க்கப்பட்ட துணி கொண்டு தேய்த்து உடல் சூட்டை தணிக்க வேண்டும். ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் உடனடியாக இறங்கி குளிப்பதன் வழியாகவும் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னையினால் ஏற்படும் மயக்கத்தை தடுக்க முடியும்.

இந்தியாவில் கொதிக்கும் வெயிலினால் பல உயிர்கள்  பறிபோகின்றன. பெரும்பாலும் வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு அதிகமாக ஏற்படுகின்றது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நீர்சத்து வற்றி, பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட நோய் இருக்கும் நபர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகல் 11 மணி முதல் 3 மணி வரை கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்கள் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெயில் காலத்தில் வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று செரிமான கோளாறு. நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் வழியாக வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதிகமாகி, உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக சூட்டின் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பு வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாகவேக் காணப்படுகின்றது.

இந்த பிரச்னையை சரி செய்ய குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். வழக்கமான நாட்களை விட அதிகளவில் தண்ணீர், காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள், வெயில் காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலுக்குத் தேவையான நீர்சத்து குறையாமல் இருக்கும். பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவதால் உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகாமல் இருக்கவும் உதவுகின்றது. பருவகால பழங்களை உண்ணுதல், நீர்ச்சத்து உள்ள காய்களை எடுத்துக் கொள்ளுதல் வழியாக உடலின் சூட்டை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அடிக்கடி இளநீர் குடிக்கும் போது வயிற்றில் pHஎன்னும் ஹைட்ரஜன் அளவு சீராக இருக்கும். இதனால் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் வெயில் காலங்களில் ஏற்படாது.

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து மிக வேகமாக வெளியேறுகிறது. உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைத்திருக்கவும், நீரேற்றமாக இருக்கவும் நம் உடல் வெப்பத்தினால் இழந்த தண்ணீரை உடலுக்குள் நிரப்புவதும் அவசியம். எனவே அதிக தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து, உடலுக்கு குளிர்ச்சி, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள்,புளிப்பற்ற தயிர், மோர், இளநீர், இளம்தேங்காய், சோளம், மாம்பழம், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், எலுமிச்சைப் பழங்கள். ஆரஞ்சு போன்றவற்றை நாம் உணவாக இக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் விளையும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சுவையாக இருப்பதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் வழங்குகின்றன. இதனால் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வழங்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நார்ச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை உணவுகளாக மட்டுமன்றி சிற்றுண்டி வகைகளாகவும்,பழச்சாறுகளாகவும் நாம் எடுத்துகொள்ளும் போது சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாகவும் மாறுகின்றன.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் வழியாக இக்கோடைக்காலத்தில் நாம் நமது நல்வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இப்பழக்க வழக்கங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் வலுவாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நீண்டகால ஆரோக்கிய நன்மைகளுக்கும் பங்களிக்கின்றன. அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் காபி பொருள்களை உட்கொள்வதைத் தவிர்த்தல் காலை மாலை உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்தல், இரு நேரம் குளித்தல், சூரிய ஒளியில் இருந்து னம் உடலைப் பாதுகாக்க பருத்தி ஆடைகளைத் தளர்வாகவும் சுத்தமாகவும் அணிதல், தொப்பிகள் கண்ணாடிகள் போன்றவற்றை அணிதல், இயற்கை எழில் கொஞ்சும் மலையேற்றப் பாதைகளில் பயணம் மேற்கொள்ளுதல், விரும்பும் விளையாட்டுக்களை விளையாடுதல், போன்றவற்றால் நம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம்.

கோடை காலம் பெரும்பாலும் ஓய்வோடு தொடர்புடையதாக இருந்தாலும், இந்தப் பருவம் நமது மன ஆரோக்கியத்திற்கு பல சவால்களைக் கொண்டுவருகின்றது. வெப்பத்தினால் ஏற்படும் ஒருவிதமான எரிச்சல் உணர்வு நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கின்றது. வழக்கமான செயல்களில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் இக்காலத்தில் நம்மை அதிகமாகப் பாதிக்கின்றன. எனவே நம்மை பாதிக்கும் இக்கோடைகால சூழல்களில் இருந்து நம்மைக் காக்கவும், நேர்மறையான முறையில்  மனநலனை பராமரிக்கவும், நமது சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியம்.

மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபட நேரம் ஒதுக்குவோம், நினைவாற்றலைப் பயிற்சி செய்யும் செயல்கள், மகிழ்வைத்தரும் பொழுதுபோக்குகள், இயற்கையின் அமைதியான சூழலை இரசித்தல், ஆழ்ந்த சுவாசப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றினால் நம் மன அழுத்தத்தை போக்கி சமநிலையாக்குவோம். நமது உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, ​ஆழ்ந்த உறக்கத்தைத் தந்து, ​எலும்புகளை வலுவாக்கி, கண்களுக்கு ஆரோக்கியத்தை அளித்து, ​மனச்சோர்வைக் குறைத்து, ​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ​நோய்பாதிப்புகள் அபாயத்தை குறைக்கும் சூரிய ஆற்றலை நமது உடலில் அளவோடு பெற்று வளமோடு வாழ்வோம். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்து நலமுடன் வாழ்வோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2023, 12:58