தேடுதல்

நண்பர்களோடு சிறார் நண்பர்களோடு சிறார்  (ANSA)

வாரம் ஓர் அலசல் - உலக நண்பர்கள் தினம்

நண்பர்கள் நம் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளையும் நன்கு அறிவார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே அந்த நல்ல நிகழ்வுகளுக்கு காரணமானவர்களாகவும், அந்த நிகழ்வில் வாழ்ந்தவர்களாகவும் இருப்பர்.
உலக நண்பர்கள் தினம் - முனைவர் அருள் ஜோஸ்பின்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நட்பு, நண்பர்கள் என்றாலே மனதில் ஓர் இனம் புரியாத சந்தோசம் நமக்குள் தோன்றும். நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை அது நலமான வாழ்க்கையல்ல ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என யாராக இருந்தாலும் நட்பும் நண்பர்களும் மிக முக்கியம். நம் அனைவருக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் நல்ல நண்பர்கள் ஒரு சிலருக்கே உண்டு. நண்பர்கள் நம் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளையும் நன்கு அறிவார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே அந்த நல்ல நிகழ்வுகளுக்கு காரணமானவர்களாகவும், அந்த நிகழ்வில் வாழ்ந்தவர்களாகவும் இருப்பர். இத்தகைய சிறப்பும் வலிமையும் வாய்ந்த நண்பர்களையும் நட்பையும் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையானது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் திருத்தந்தையின் போர்த்துக்கல் திருப்பயணம் பற்றிய செய்திகள் இடம்பெற இருப்பதால் இன்றைய நம் வாரம் ஓர் அலசலில் உலக நண்பர்கள் தினம் பற்றிய கருத்துக்களைக் காணலாம்.

உலக நண்பர்கள் தினம் பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் முனைவர் ச.அருள் ஜோஸ்பின். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியாரன அருள் ஜோஸ்பின் அவர்கள், இருபத்தைந்திற்கும் மேற்பட்ட தேசிய,  பன்னாட்டு கருத்தரங்குகளில் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் திறமையாக பல உரைகளை ஆற்றியுள்ளார். ஆசிரிய அப்துல்கலாம், ஞானச்சுடர், பாரதி தமிழ்ச் செல்வர் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். பேராசிரியர் அருள் ஜோஸ்பின் அவர்களை உலக நண்பர்கள் தினம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

பல நேரங்களில் நாம் நல்ல நண்பர்களை தேடி அலைகிறோம். அவர்கள் எங்கு இருப்பார்கள் எப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு விட்டு நாமே நல்ல நண்பர்களாக மாறுவோம். சிறந்த நண்பர்கள் நமக்குத் தானாக கிடைப்பார்கள். நண்பர்கள் நிலைக்கண்ணாடி போன்றவர்கள். நமது முக அழகை, உடையை சரி செய்ய உதவுவது கண்ணாடி. நண்பர்களோ நமது நிறை குறைகளை சரி செய்வர். இரும்பு மரச்சட்டம் கொண்டு கண்ணாடியின் விளிம்புகள் பாதுகாக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் பண்பு கொண்டு நமது நட்பு பிரியாமல் உடையாமல் பாதுகாக்கப்படுகின்றது. கண்ணாடியின் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்டு மறுபுறம் பிம்பம் பிரதிபலிக்கப்படுகின்றது, நட்பிலோ தன்னை மறைத்து நண்பர்களை பிரதிபலிக்கச் செய்கின்றது. இத்தகைய சிறப்பான நட்பினை பெற்று வாழ்வோம். பெற்ற நட்பைப் பேணிக்காப்போம். அனைவருக்கும் இனிய உலக நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2023, 11:11