பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டங்கள் மறுபரிசீலனைச் செய்யப்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாகிஸ்தானில் அமலில் இருக்கும் தேவநிந்தனைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பாகிஸ்தான் அரசு விலகி நிற்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.
எந்த ஒரு சட்டமும் சகிப்பற்றத்தன்மையை ஊக்குவிப்பதற்கு காரணமாகக் கூடாது என உரைக்கும் மனித உரிமை அமைப்புக்கள், பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டங்கள் ஆழமாக மறுபரிசீலனைச் செய்யப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளன.
மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் பாகிஸ்தானில் தொடர்ந்து இடம்பெற்றுவருவது, அந்நாட்டில் தேவநிந்தனைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று கூறியுள்ளது, ஆசிய மனித அமைப்புக்களின் கூட்டுக்குழு.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள Jaranwala நகரின் இரு கிறிஸ்தவர்கள், புனித நூலான குரானை அவமதிப்புக்குள்ளாக்கினர் என்ற தேவநிந்தனை குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16 அன்று 89க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகளும் 20 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ கோவில்களும் தாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
சிறுபான்மை சமுதாயங்களின் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை குடிமக்களிடம் ஏற்படுத்தவேண்டியது அரசுகளின் கடமை என்பதை வலியுறுத்தும் இந்த மனித உரிமை அமைப்புக்கள், சகிப்பற்றத்தன்மையை அனுமதிக்கும், மற்றும் அடிப்படை உரிமைகளை காலில் இட்டு நசுக்க உதவும் சட்டங்கள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படவேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன.
தேவநிந்தனைச் சட்டத்தால் அநியாயமாகப் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது ஆசிய மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டுக்குழு.(UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்