தேடுதல்

ரமோன் மகசேசே விருது பெறுபவர்கள் ரமோன் மகசேசே விருது பெறுபவர்கள் 

2023 ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது

'ஆசியாவின் நோபல் பரிசு' என அழைக்கப்படும், 'ரமோன் மகசேசே' விருது, தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆசியாவின் நம்பிக்கை வெளிச்சங்களாக இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றுபவர்கள், வாழ்வின் மிக முக்கியமான சில சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளை அந்தந்த சமூகங்களுக்கு வழங்குபவர்கள் ஆகியோர் ரமோன் மகசேசே விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்றுக் கூறியுள்ளார் Susanna Afan.

ஆகஸ்ட் 31, வியாழன் அன்று 65ஆவது ஆண்டு ராமன் மகசேசே விருது - 2023 குறித்த செய்திகளை வெளியிட்ட அவ்வறக்கட்டளையின் நிர்வாகக்குழு 2023 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெறும் நான்கு வெற்றியாளர்களை அறிவித்துள்ள நிலையில், வெரித்தாஸ் வானொலிச் செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார் அவ்விருது அறக்கட்டளையின் தலைவர் Susanna Afan.

1958இல் நிறுவப்பட்டதும், ஆசியாவின் முதன்மையான மற்றும் பெருமைக்குரிய விருதாகப் புகழப்படுவதுமான ரமோன் மகசேசே விருதினை 2023ஆம் ஆண்டிற்காக பெறும் நால்வரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த ரவி கண்ணன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரவி கண்ணன் புற்று நோய்ப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், பிலிப்பீன்ஸைச் சார்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் பெண்களின் அமைதிக்காகப் பணியாற்றியதற்காகவும், கிழக்குத்திமோரைச் சார்ந்த யூஜேனியோ உணவுப்பாதுக்காப்புத் துறையில் சிறப்புடன் செயலாற்றியதற்காகவும், பங்களாதேஷைச் சார்ந்த  Korvi Rakshand  அனைவருக்கும் கல்வி என்ற முறையில் செயல்பட்டதற்காகவும் விருதினைப் பெற உள்ளார்கள்.

மக்களின் பொது நலன்,  திறமை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் கூடிய பணி, ஏழைகளுக்கான நலவாழ்வுப்பணி, புற்றுநோய் பராமரிப்பு ஆகியவற்றை செய்துவரும் தமிழரான ரவி கண்ணன் அவர்கள், பலனை எதிர்பார்க்காமல் இந்திய மாநிலமான அஸ்ஸாமில் இலட்சக் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக, முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

இந்த ஆண்டு ரமோன் மகசேசே விருதாளர்கள் ஒவ்வொருவரும் மறைந்த பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவரின் உருவம் கொண்ட பதக்கமும், சான்றிதழும், பணமும் பரிசாகப் பெறுவார்கள்.

2023 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது வரும் நவம்பர் 11 அன்று பிலிப்பீன்ஸின் தலைநகர் மணிலாவில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2023, 13:14