தேடுதல்

உக்ரைன் சிறார் உக்ரைன் சிறார்  (ANSA)

ஆபத்தில் இருக்கும் உக்ரைன் சிறாரைக் காப்பாற்றுங்கள்

உக்ரைனில் பாதிக்கப்பட்ட சிறாரின் எண்ணிக்கை மே முதல் ஆகஸ்ட் வரையுள்ள நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடந்த 18 மாதங்களாக நடைபெற்றுவரும் போரினால் உக்ரைன் நாடும் அதன் மக்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், சிறார் மற்றும் அவர்களது குடும்பங்கள் அதிக ஆபத்திலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உறுதியற்ற நிலையிலும் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் அம்சத் யாமின்.

உக்ரைனில் கடந்த நான்கு மாதங்களில் பாதிக்கப்பட்ட சிறாரின் எண்ணிக்கை 7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், 18 மாதங்களில் கோடைகாலத்தில் இறந்த 24 சிறார் உட்பட மொத்தம் 540 க்கும் மேற்பட்ட சிறார் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்  தெரிவித்துள்ளார் Save the Children அமைப்பின் வழக்கறிஞர் அம்ஜத் யாமின்.

அனைத்துத் தரப்பினரும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் தங்குமிடங்கள் குறிப்பாக சிறார் அதிகம் இருக்கும் பகுதிகளான வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சேவ் த சில்ரன் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உக்ரைனில் பாதிக்கப்பட்ட சிறாரின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே முதல் ஆகஸ்ட் வரையுள்ள நான்கு மாதங்கள் 7 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும், அதே சமயம் வான் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

மேலும், ஆபத்தில் இருக்கும் சிறாரைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது Save the Children என்னும் பன்னாட்டு அமைப்பு.

உக்ரைனில் 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் Save the Children அமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், இது ஐரோப்பா முழுவதிலும் உள்ள புலம்பெயர்ந்தோர் குடும்பங்களுக்கு ஆதரவளித்து அவர்களது குழந்தைகளின் கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளையும் செய்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2023, 13:05