தேடுதல்

தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய பள்ளி குழந்தைகள் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய பள்ளி குழந்தைகள் 

வன்முறைகளால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

புர்கினா பாசோவில் வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பத்து இலட்ச குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

புர்கினா பாசோவில் வன்முறை, பாதுகாப்பின்மை காரணமாக இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தால், பள்ளிகள் தற்காலிக தங்குமிடங்களாக மாறி உள்ள நிலையில், பத்து இலட்ச குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3, 2023 - புதிய 2023-2024 கல்வியாண்டின் தொடக்கத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக 6,149 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன பத்துலட்ச குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும், இடம்பெயர்ந்த 52,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு தற்போது குறைந்தபட்சம் 230 பள்ளிகள் தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கான அணுகலை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் யுனிசெப் அறிவித்துள்ளது..

வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பல குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப முடியாமல் இருப்பதும், பல பள்ளிகள் மூடப்பட்டிருப்பதும் உண்மையிலேயே வருத்தமளிப்பதாகவும், ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும் அமைதி மற்றும் பாதுகாப்பில் அவர்களின் கனவுகளை நனவாக்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் புர்கினா பாசோவின் யுனிசெப் பிரதிநிதி ஜான் அக்போர் தெரிவித்துள்ளார்.

மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட யுனிசெப் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து, தேசிய கல்வி, கல்வியறிவு மற்றும் தேசிய மொழிகளின் மேம்பாட்டு அமைச்சகம் (MENAPLN) குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது,

இந்த ஆண்டு மட்டும் 7,63,000 குழந்தைகளுக்கு முறையான கல்வி, துரிதப்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வி உத்திகள், தொழிற்பயிற்சி மற்றும் வானொலிக் கல்வி ஆகியவைகளை யுனிசெப் ஆதரித்தள்ளது, மேலும் வானொலிக் கல்விக்கு ஆதரவாக 2,670 வானொலிப் பெட்டிகளும், 37,400 குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 500  பள்ளிக் கருவிகளும், 435 பொழுதுபோக்கு மற்றும் குழந்தைப் பருவ மேம்பாட்டு (ECD) கருவிகளையும் இது விநியோகித்துள்ளது. பாதுகாப்பான அணுகுமுறையைப் பயன்படுத்துவதை உறுதிச் செய்ய ஆசிரியர் பயிற்சியையும் ஆதரித்துள்ளது.

குறைந்தபட்சம் 756 பெண்கள் மற்றும் சிறுவர்கள் அமைதி மேம்பாடு, சமூக ஒற்றுமை மற்றும் தனி மனித தகவல் தொடர்பு ஆகியவற்றில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் 76,800 பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பாளர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளை பள்ளிகளில் பெருமளவில் சேர்ப்பதை ஊக்குவிக்குவிக்கவும் சுமார் பத்து இலட்ச பெற்றோரை வீடு வீடாகச் சென்று தொடர்பு கொள்ள வைத்ததாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான நெருக்கடி தொடர்வதால், சவால்கள் மற்றும் தேவைகள் நீடிப்பதாகவும், வளங்கள் பற்றாக்குறையாக உள்ளதென்றும். குழந்தைகள் மனிதாபிமான நடவடிக்கை மேல்முறையீடு 2023க்கு இணங்க, குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தொடர்ந்து உயிர்காக்கும் உதவி மற்றும் சேவைகளை வழங்க யுனிசெப்புக்கு 226.7 மில்லியன் தேவைப்படுகிறது என்றும்,   இன்று வரை விண்ணப்பிக்கப்பட்ட நிதியில் 13% மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது யுனிசெப்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2023, 16:01