உக்ரைன் மாணவர்களுக்கு UNICEFன் கல்வியுதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனின் 10 மாவட்டங்களின் மாணவர்கள் படிப்பதற்கு உதவும் வகையில் 29,000 மடிக்கணனிகளை வழங்கியுள்ளது UNICEF அமைப்பு.
ஐ.நாவின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனமான UNICEF, உக்ரைனின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவியை உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து வழங்கியுள்ளது.
போரின் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளின் கல்வியுரிமையை வலியுறுத்தும் விதமாக, இணையதள வகுப்புகளுக்கு உதவும் வகையில் 29,000 மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
மடிக்கணனிகளை வாங்குவதற்கும் அவைகளை விநியோகம் செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மன், பின்லாந்து, ஜப்பான், கொரியா ஆகியவைகளுடன் இணைந்து, அவைகள் வழியாக UNICEF உழைத்துள்ளது.
புலம்பெயர்ந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் உள்ள குழந்தைகள், பெற்றோரின் கவனிப்பின்றி விடப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு இம்மடிக்கணனி உதவியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து மூன்று மாதங்களில் மேலும் ஏறக்குறைய 40 ஆயிரம் மடிக்கணனிகள் ஏனைய மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் UNICEF அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்