தென்சூடானில் மருத்துவ உதவியின்றி பிறக்கும் 45,000 குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அடுத்த மூன்று மாதங்களில், சூடானில் மருத்துவ உதவியின்றி ஏறத்தாழ 29,250 குழந்தைகள் பிறக்கும் எனவும், கடுமையான நிரந்தர மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களுக்கு அக்குழந்தைகளையும் அவைகளின் அன்னையர்களையும் அச்சூழல் ஆட்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான Save the Children எனப்படும் உலகளாவிய அமைப்பு.
ஆபத்தில் இருக்கும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் Save the Children என்ற அமைப்பு டிசம்பர் 19, இச்செவ்வாயன்று இத்தகைய எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த மூன்று மாதங்களில் 45,000 குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்கள் தொகையில் 35 விழுக்காடு மட்டுமே எந்தவொரு நலப் பாதுகாப்புக்கும் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது அவ்வமைப்பு.
ஏப்ரலில் மோதல் வெடித்தபோது, இலட்சக்கணக்கான மக்கள் திகிலில் மூழ்கினர் என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான புதிய குழந்தைகள் இந்தத் துயரத்தில் பிறக்கும் எனவும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நல வசதி கிடைக்காமல் போய்விடும் என்று எச்சரித்துள்ளார் இவ்வமைப்பின் இயக்குநர் Arif Noor.
மேலும் உலகின் பெரும்பகுதி விடுமுறை நாட்களையும் ஆண்டின் இறுதி நாட்களையும் கொண்டாடும் அதேவேளையில், சூடானில் 2 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் வன்முறை, பயம், பசி, நோய் மற்றும் வலி ஆகியவற்றில் வாழும் சூழல் நிலவுகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் Arif Noor
Save the Children அமைப்பு சூடானில் கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் அனைத்துலகக் கூட்டமைப்புகளுடன் இணைந்து உயிர்காக்கும் உதவி மற்றும் குழந்தை பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது. மோதல் வெடித்ததில் இருந்து, இவ்வமைப்பின் நற்பணிகள், 1,35,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 2,50,000 மக்களைச் சென்றடைந்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் விதமாக மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து மையங்களை நடத்தி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்