தேடுதல்

ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு முந்தைய நாள் தீ எரிக்கும் சடங்கு(ஜனவரி 6ஆம் தேதி) ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு முந்தைய நாள் தீ எரிக்கும் சடங்கு(ஜனவரி 6ஆம் தேதி)  (ANSA)

வாரம் ஓர் அலசல் - பழையன கழிதலும், புதியன புகுதலும்

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே, இவ்வார இறுதியிலிருந்து பொங்கல் விழாக்கள் துவங்குகின்றன. போகியில் துவங்கி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என திருவிழாக்கள் தொடர்கின்றன. நாம் நம் இன்றைய, வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில், தமிழ் ஆண்டின் இறுதி நாளான மார்கழி 30ல் கொண்டாடப்படும், அதாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் போகித்திருநாள் குறித்து காண்போம்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். பழைய பொருட்களையும், பயனற்றவைகளையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படும் போகிப் பண்டிகையன்று, வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். இதெல்லாம் எதற்காக என்றால், புத்தாண்டை, புது மனிதனாக வரவேற்கவேண்டும் என்பதற்காகவே. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

பழையனவற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது, அது காலப்போக்கில் மருவி போகி என மாறியுள்ளது என்று உரைப்பர்.

​இந்த நாள், தீயில் பழைய, தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாள். இதன் மூலம் ஆன்மாவை உணர்தலும், ஆன்மாவை தூய்மையாக்குதலும் நடக்கின்றன.

போகி என்றாலே பழைய குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதுதான் நம் நினைவுக்கு வந்தாலும், மழை தெய்வமான இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாகவும் போகி உள்ளது. இந்த வழிபாட்டில் விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக மனமுருகி இறைவனை வழிபடுகின்றனர். விவசாயத்திற்கு உதவும் கருவிகளை அன்று வணங்கி நன்றி செலுத்துகின்றனர்.

அக்கால வழக்கப்படி, ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். ஒவ்வோர் ஆங்கில ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி, திருத்தந்தையர் 'Te Deum'(இறைவா உம்மை புகழ்கின்றோம்) என்ற நன்றி வழிபாட்டை நிகழ்த்துவது நாம் அறிந்ததே.

போகம் என்றால் இன்பம், மகிழ்ச்சி என்கிற பொருள்படுகிறது. அதே வேளை போகம் என்னும் வார்த்தை விவசாயத்தோடு தொடர்புடையது. இந்த ஆண்டு ஒரு போகம் செய்தேன், இரண்டு போகம் செய்தேன் என விவசாயிகள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆகவே, பொங்கலின் முப்பெரும் விழாக்களான போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என மூன்றுமே விவசாயத் தொடர்புடையவை என்று கூறுவோரும் உண்டு. அதேவேளை, இந்நாள், ஏடு எடுக்கும் தினம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப்பட்ட நாள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நாளில் பழைய ஓலைச் சுவடிகளை எடுத்து, பழைய சிதைந்த ஏடுகளை நீக்கி விட்டு புதிய ஏடுகளைச் சேர்க்கும் பழக்கம் இருந்தது. அடிப்படையில் இதைப் பார்த்தோமானால், ஆண்டின் இறுதி நாளில் பழையன கழிந்து புதியன புகுதலுக்கு தயாராக இருத்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது இடம்பெற்றது.  `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் முதுமொழி, போகிப் பண்டிகையையும் தைத் திருநாளையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.  

`பழையன கழிதல்…’ என்று வரும்போது, மனதில் இருக்கும் மாசுக்கள், தவறான எண்ணங்கள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகளை நீக்கிவிட்டு, தூய்மையான எண்ணம் மற்றும் நேர்மறையான சிந்தனையை விதைக்கும் வகையில் செயல்பட வேண்டும். மனதில் இருக்கும் பழைமை அனைத்தையும் நீக்கினால், புதிய ஆரோக்கியம் பிறக்கும்.

ஆனால், அண்மைக்காலங்களில், போகிப் பண்டிகை என்பது சுற்றுச்சூழலின் உயிர்ப்பினைக் கெடுக்கும் நாளாக மாறிப்போனது. உணர்வுரீதியாக ஆரோக்கியத்துடன் கொண்டாடப்பட்ட நாள்கள் மறைந்து, விஷப்புகையை சுவாசிக்கும் ஒரு நாளாக போகிப் பண்டிகை மாறிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு `போகி' என்றால் எதையாவது எரித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சைக்கிள் - கார் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும், துணிகளையும் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

பிளாஸ்டிக்குகளைப் பார்க்க அழகாகத் தோற்றமளிக்கும். ஆனால் அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி யாரும் யோசிப்பதில்லை. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிவரும் புகை தீவிர நெஞ்சக நோய்களை ஏற்படுத்தி, வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் உழலச் செய்யும்.

டயர்களை எரிப்பதால் கந்தக ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, டையாக்சின், பென்சீன் போன்ற பல பொருள்கள் ஆகாயத்தில் உற்சாகமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்குவதில் தொடங்கி, கண் எரிச்சல், நுரையீரல் நோய்கள், நரம்பு மண்டலக் கோளாறுகள் என நீண்டு இறுதியாகப் புற்றுநோயையும் ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு.

காற்று மாசுபடுவதால் மனிதர்களுக்கு மட்டுமன்றி, உயிர்ச் சங்கிலியை பாதுகாக்க உதவும் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் வாழ்நாளும் வெகுவாகக் குறையும் என்கிறது ஆய்வு. `தனக்காக வாழ்வதல்ல மனிதம்; அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பதுதான் மனிதம்' என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடலாகும். புதுமைக்கு இடமளித்துப் பழமை மாறுகிறது என்பது நம் வாழ்வில் காண்பதேயெனினும்,  அதேவேளை, பழையன கழிதலும் புதியன புகுதலும் காலப்போக்கில் குற்றமாகா வெனினும், பழையன எல்லாமே கழிந்து விடவேண்டும் - புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பழையனவற்றிலும் புதியனவற்றிலும் உள்ள நல்லனவற்றைக் கொள்ளலாம், அல்லனவற்றைத் தள்ளலாம்.

நிறைய நேரங்களில் மனிதன் காலத்திற்குப் பொருந்தாத பழமையிலேயே ஊறிப்போய் அவற்றையே தொடர்ச்சியாக பின்பற்றி வாழ விரும்புகின்றான். அவ்வாறான சூழலில் கால மாற்றத்திற்குப் பொருந்திப் போகின்ற புதியவற்றிற்கு இடமளிக்க வேண்டும் என்ற மிகச்சிறந்த கருத்தை அப்பாடல் சொல்கின்றது.

ஆனால் இன்னோர் விடயத்தையும் மனதில் வைத்திருப்பது அவசியம். பழையன எல்லாம் பழையன அல்ல, புதியன எல்லாம் புதியன அல்ல. அதாவது பழமையான எல்லாம் பயனற்றவை, புதியன எல்லாமே காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. நிறைய சந்தர்ப்பங்களில் பழமையானவை கூட எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் புதுமையானவை சமகால உலகிற்குப் பொருந்தாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் உலகில் பொதுவாக அடிமைத்தனம் இருந்தது, ஆதிக்க மனநிலை இருந்தது, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இருந்தன, சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன, மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. இதே போன்ற பிற்போக்குத்தனங்கள் கொட்டிக்கிடந்தன. தற்போது அவை இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரியளவில் குறைந்து பகுத்தறிவும் சமத்துவமும் வளர்ந்திருக்கின்றன என்று சொல்லலாம். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால் பழைமையானவற்றை கைவிட்டு புதியவற்றிற்கு இடமளித்ததுதான்.

ஆனால், எல்லா நேரங்களிலும் பழையன எல்லாம் தேவையற்றவை என்றும் புதியன எல்லாம் தேவையானவை என்றும் எண்ணுவது தவறு. நவீனம் என்ற பெயரால் சமூகத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகள் நிறையவே நடந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் சமூகத்திற்கு தேவையான நன்மையான விடயங்களைக் கூட பழமை என்ற பெயரால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகளும் நிறையவே நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, நாம் தனிமனிதனாக சரியானது எது? தவறானது எது? என்ற புரிதலோடு செயற்படுவது அவசியமாகின்றது. தேவையான சந்தர்ப்பங்களில் பழமையை தவிர்த்து புதுமையை புகுத்த வேண்டும்.

பழையன கழிதல் என்ற பெயரில் நம் வாழ்வை நெறிப்படுத்தும் விஷயங்களை கைவிடுதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழையன என்று நாம் எண்ணும் சில, எவ்வளவு பழமையாகிப் போனாலும் இன்றைக்கும், எதிர்வரும் காலத்திற்கும் பொருந்துவனவாக காலத்தை வென்று ஒளிர்கின்றன. காலங்காலமாக பேணப்பட்டு வருகின்ற பண்பாடுகள், கலாச்சாரங்கள் என நமது வாழ்விற்கு வழிகாட்டுபவற்றை எக்காலத்திலும் பழையன என்று ஒதுக்கிட முடியாது என்பதையும் நினைவில் கொள்வோம். ஆகவே, பழையன எல்லாம் பழிக்கத்தக்கன, புதியன எல்லாம் போற்றற்குரியன என்றோ, பழையன எல்லாம் போற்றற்குரியன, புதியன எல்லாம் பழித்தற்குரியன என்றோ எவரும் கூறிடல் இயலாது.

திருவள்ளுவர் தினத்திற்கும் நம்மைத் தயாரித்துவரும் வேளையில், அவர் கூறிய. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதைக் கருத்தில் கொண்டுச் செயல்படுவோம்.  

விவிலியத்தில் யோவான் நற்செய்தி 3ஆம் பிரிவில் பார்த்தோமானால், புதிய படைப்பாக மாறுவதைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். நிக்கதேம், இயேசுவுடன் ஓர் இரவில் நடத்திய உரையாடலில், "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என இயேசு உரைப்பதைக் காண்கிறோம். ஆம், பழையன களைந்து புதியதாய் நாம் பிறக்க வேண்டும் என்ற இயேசுவின் அதே அழைப்பைத்தான், தமிழ் ஆண்டின் இறுதி நாளிலும் நாம் கேட்கிறோம். புனித பவுலும் அழகாக, ‘ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!’ என்று கூறுவதும் இதற்கு பொருந்தும்தானே.

அனைவருக்கும் போகித் திருநாள் தயாரிப்பிற்கான வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2024, 11:00