தேடுதல்

விளைநில பாதிப்புகள் விளைநில பாதிப்புகள்   (AFP or licensors)

லெபனோனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள்!

அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மதித்து லெபனோனில் நிலவிவரும் இந்த நெருக்கடியை உடனடியாகத் தணிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகிறோம் : லெபனோனுக்கான Save the Children அமைப்பின் இயக்குநர் Jennifer Moorehead

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்ரேலின் எல்லையில் தெற்கு லெபனோனில் அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக ஆலிவ் தோப்புகள் மற்றும் விளைநிலங்களை அழிக்கப்பட்டு  86,000 மக்கள் வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

மேலும் அனைத்துலக  மனிதாபிமான சட்டத்தை மதிக்கவும், உடனடியாக நெருக்கடியைத் தணிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், நாட்டிலும் மாநிலங்களிலும் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான தூதரக முயற்சிகளில் கவனம் செலுத்தவும் அனைத்துத் தரப்பினரையும் அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் லெபனோனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எல்லை தாண்டிய வன்முறை தீவிரமடைந்ததில் இருந்து, தெற்கு லெபனோனில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்துள்ளன என்றும், அறுவடை காலத்தில் 47,000 ஆலிவ் மரங்களும், விளைநிலத்திலுள்ள மற்ற பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது அவ்வமைப்பு.

இப்போரின் காரணமாக ஏறத்தாழ 31,000 குழந்தைகள் உட்பட 86,000-க்கும் அதிகமான மக்கள் தெற்கு லெபனோனில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறும்போது, தங்களால் சுமந்துசெல்லக் கூடியவற்றை மட்டுமே தங்களுடன் எடுத்துச்செல்ல முடிகின்றது என்றும் கவலை தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.

குறிப்பாக, இடம்பெயர்ந்துள்ளவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகமான துயரங்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ள அவ்வமைப்பு, ஆபத்தில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள லெபனோனுக்கான Save the Children அமைப்பின் இயக்குநர் Jennifer Moorehead அவர்கள், ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதையும், குடும்பங்கள் தங்களின் மொத்த விளைச்சலையும், அவர்களின் ஒரே வருமான ஆதாரத்தையும் இழந்து தவிப்பதையும் நாங்கள் காண்கிறோம் என்றும், இதற்கு முன்னரே அம்மக்கள் பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுத் துயருற்று வருகின்றனர் என்றும் வருத்தமுடன் கூறியுள்ளார்.

லெபனோனில் உள்ள ஆலிவ் துறை என்பது 1,10,000 விவசாயிகளை உள்ளடக்கிய ஒன்று. மேலும் அந்நாட்டின் மொத்த விவசாய நிலத்தில் ஏறத்தாழ கால் பகுதி 1 கோடியே  20 இலட்ச மரங்களால் சூழப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பல லெபனோன் கிராம மக்களுக்கு ஆலிவ் அறுவடை முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. அதுமட்டுமன்றி, நாட்டின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி உற்பத்தி 7 விழுக்காடாக உள்ளது. இப்போரின்போது இராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட தீயினால் சிட்ரஸ் மற்றும் வாழைப் பயிர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2024, 14:08