தேடுதல்

பாலஸ்தீனிய-அமெரிக்க பேராசிரியர் Mohammed Abu-Nimer பாலஸ்தீனிய-அமெரிக்க பேராசிரியர் Mohammed Abu-Nimer  

பாலஸ்தீனிய-அமெரிக்க பேராசிரியருக்கு 2024 நிவானோ அமைதி விருது

குறிப்பிட்ட மத எல்லைகளையும் தாண்டி, அதேவேளை மத உணர்வுகளோடு அமைதி நடவடிக்கைகளை ஊக்குவிப்பவர்களுக்கு என வழங்கப்படுகிறது நிவானோ அமைதி விருது,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜப்பான் நாட்டின் Nikkyo Niwano என்பவரால் 1978ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நிவானோ அமைதி நிறுவனத்தின் 41வது அமைதி விருது பாலஸ்தீனிய-அமெரிக்க பேராசிரியர் Mohammed Abu-Nimer அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மத எல்லைகளையும் தாண்டி, அதேவேளை மத உணர்வுகளோடு அமைதி நடவடிக்கைகளை ஊக்குவிப்பவர்களுக்கு என வழங்கப்படும் நிவானோ அமைதி விருது, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கும், அமைதிக்கான அர்ப்பணத்திற்கும் என தன் வாழ்நாளை அர்ப்பணித்த  Abu-Nimerக்கு இவ்வாண்டு வழங்கப்படுகிறது.

மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவைகளின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்து, அமைதியை கட்டியெழுப்புவதையும் மோதல்களுக்குத் தீர்வு காண்பதையும் கல்வித் திட்டத்தில் புகுத்தி செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார் பாலஸ்தீனிய அமெரிக்க பேராசிரியர் Abu-Nimer.

இவ்வாண்டிற்கான நிவானோ அமைதி விருதைப் பெறும் Abu-Nimer அவர்கள், மோதல்களுக்கு தீர்வு காணுதல், வன்முறையற்ற வழிகள், மனித உரிமைகள், மற்றும் வளர்ச்சி தொடர்புகடைய ஆய்வுகள், கல்வி, மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சேலம் அமைப்பை அமெரிக்காவில் துவங்கி பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதங்களிடையே மற்றும் கலாச்சாரங்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து அமைதிக்கு பங்காற்றி வருகிறார் பேராசிரியர் Abu-Nimer.

வட அயர்லாந்து, இலங்கை, பிலிப்பீன்சின் மிந்தனாவோ, பால்கன் பகுதி, ஆப்ரிக்காவின் பல நாடுகள் என உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அங்கு சென்று சேவையாற்றியுள்ளார் Abu-Nimer என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதங்களிடையேயான ஒத்துழைப்பிற்கும் உலக அமைதிக்கும் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் நிவானோ அமைதி விருது, இவ்வாண்டு மே மாதம் 14ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் வழங்கப்படுகிறது.

இந்த விருது ஒரு சான்றிதழையும், பதக்கத்தையும், 2 கோடி ஜப்பானிய யென்களையும் உள்ளடக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2024, 15:22