தேடுதல்

காசா பகுதி குழந்தைகள் காசா பகுதி குழந்தைகள் 

காசாவில் எண்ணற்ற குழந்தைகள் பலியாகும் ஆபத்து உள்ளது

இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் மோதல்களால் உயிரிழந்துள்ள நிலையில், காசாவின் Rafah பகுதியில் குடியேறியுள்ள மக்களுக்காக போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

காசா பகுதியின் Rafah ஆட்சி நிர்வாகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு தெரிவிக்கிறது.

ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனமான யுனிசெப் இவ்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும் புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள Rafah பகுதியில் போரிடுவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

அதிக அளவில் பெண்களும் குழந்தைகளும் என இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் மோதல்களால் உயிரிழந்துள்ள நிலையில், Rafah பகுதியில் குடியேறியுள்ள மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என விண்ணப்பிக்கும் யுனிசெப் அமைப்பு,  வன்முறைகளாலும், அடிப்படை வசதிகளின்மையாலும், மனிதாபிமான உதவிகள் தடைச் செய்யப்படுவதாலும் மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

காசா பகுதியின் மருத்துவமனைகள், தற்காலிக தங்குமிடங்கள், சந்தைகள் மற்றும் நீர் விநியோக முறைகள் தொடர்ந்து செயல்படவில்லையெனில், பசியும் நோய்களும் அதிகரித்து எண்ணற்ற குழந்தைகள் பலியாகும் ஆபத்து உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெப் அமைப்பு.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கே வழிவகுக்கும் என்பதை மனதில் கொண்டவர்களாக,  போரிடும் துருப்புக்கள் போர் நிறுத்தத்திற்கு முன்வந்து, மனிதாபிமான உதவிகள் ஆற்றப்பட வழிவகைச் செய்ய வேண்டும் எனவும் யுனிசெப் நிறுவனம் தன் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2024, 14:11