தேடுதல்

பங்களாதேசில் கொண்டாட்டம் பங்களாதேசில் கொண்டாட்டம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – உலக தாய்மொழி தினம்

ஒரு மொழி அழிக்கப்படுகின்றதெனில் அந்தமொழியை பேசுகின்ற சமூகத்தின் அடையாளங்கள் அழிக்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன என்பதே உண்மை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும் தான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். இந்த உலகத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். ஆனால், இன்றைய உலகமயமாதலினால் மொழிகள் அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவது மட்டுமல்ல, மறைந்துபோகும் அபாயமும் உள்ளது. சிறு சிறு மொழிகள் மறைந்து போகும் என்றால், கலாச்சார பன்முகத்தன்மையும் இல்லாமல் போய்விடும்.  மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள். ஒரு மொழி அழிக்கப்படுகின்றதெனில் அந்த மொழியை பேசுகின்ற சமூகத்தின் அடையாளங்கள் அழிக்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன என்பதே உண்மை.

உலகின் தொன்மையான நாகரீகமாக கருதப்படும் மாயன் நாகரீகத்தினை பற்றி ஓரளவுக்குமேல் அறிந்துகொள்ள இயலாமல் போனதற்கு அவர்களது மொழிகள் வழக்கொழிந்து போனமையும் ஒரு காரணம். பண்டைய அமெரிக்காவில் முழு எழுத்து வடிவம் பெற்ற மொழியைக் கொண்டிருந்தவர்கள் மாயன் நாகரீகத்தினர் மட்டுமே.  மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சரி அது எவ்வளவு உன்னதமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சரி வழக்கொழிந்து போய்விட்டால், இலக்கியங்களெல்லாம் வெற்றுக் கிறுக்கல்களாகி விடும். ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழிதான். இதனை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினம் என சிறப்பிக்கிறது ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனமான யுனெஸ்கோ. இவ்வாண்டிற்கான தலைப்பாக, ‘பன்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்’, என்பது எடுக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியின் முக்கியத்துவம்

கருவில் இருக்கும்போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறதாம். கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை குழந்தை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் சொல்கிறார்கள்.  நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் ஏறக்குறைய 6,000 மொழிகளிலும், 43 விழுக்காட்டு மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இந்த மொழிகளில் பலவற்றைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் 1,000க்குள்ளாகவே இருக்கும். இந்த அழியும் அபாயத்தில் உள்ள மொழிகளில் 96 விழுக்காட்டை இந்த உலகில் வாழும் மக்களுள் 4 விழுக்காட்டினரே பேசுகின்றனர். சில நூறு மொழிகளே கல்விச் செயற்பாடுகளுக்கும் ஏனைய பொது விடயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கும் குறைவான மொழிகளே தற்போதைய இணையம் போன்ற டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை.

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில், பிறமொழிக் கல்வியினை கற்றவர்களைவிட, தாய்மொழிக் கல்வியினைக் கற்றவர்களுக்கு 40 விழுக்காடு எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது

தாய்மொழியின் சிறப்பு குறித்து பேசும்போது நெல்சன் மண்டேலா, "நீங்கள் ஒரு மனிதனிடம் அவனுக்கு புரியும் மொழியில் பேசினால், நீங்கள் பேசுவது அவன் மூளைக்கு செல்லும். ஆனால், நீங்கள் அவனது தாய்மொழியில் பேசும்போது, அது அவனுடைய இதயத்துக்கு செல்லும்" என்று கூறினார்.

ஹரிஜன் பத்திரிகையில் மகாத்மா காந்தி, "எனது தாய்மொழியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தபோதும், தாயின் மார்போடு ஒட்டிக்கொள்வதுபோல, எனது தாய்மொழியைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டுமே என்னை உயிரோடு வைத்திருக்கும்" என்றார்.

ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு, அது அனைத்தையும் பிற மொழிகளில் மொழி பெயர்த்துவிட முடியாது. உதாரணமாக, தமிழில் 'மனம் குளிர வரவேற்கிறோம்' என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் எப்படி மொழி பெயர்ப்பீர்கள்?. இதைவிட, உங்கள் வீட்டில் நீ எத்தனாவது குழந்தை என்ற கேள்வியை ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பீர்கள்?. ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் சொல்லித் தாருங்களேன்.

உலகத் தாய்மொழிகள் தினம் ஏன்?

கொஞ்சம் வரலாற்றிற்குள் செல்வோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, முஸ்லிம்களை அதிகமாக கொண்டிருந்த ஒரே காரணத்தினால் புவியியல் ரீதியாக சாத்தியப்படாவிட்டாலும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது கிழக்கு வங்காளம். 1948இல் உருது மொழியை பாகிஸ்தான் ஒற்றை ஆட்சி மொழியாக மாற்றும் முயற்சியைத் தொடங்கியது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை காட்டியது. வங்க மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர்.  உருதுவை ஆட்சிமொழியாக கொண்டுவந்த பாகிஸ்தான் அரசு கல்வி தேர்வில் இருந்த வங்கமொழியை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. இதனால் கடும் போராட்டங்கள் எழுந்தன.  டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தனர். இந்த போராட்டம் அரசின் அடக்குமுறையினால் வன்முறையாக மாறியது.

இப்படியாக நீண்ட இந்த பிரச்சனை 1952 பிப்ரவரி 21ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மற்றும்  மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் அரசு நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்களின் உயிரைப் பறிக்கும்வரைச் சென்றது. இதனால் போராட்டம் உக்கிரமடையவே 1956இல் வங்க மொழியும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும், இந்த மொழியினால் ஏற்பட்ட விரிசல் 1971இல் வங்கதேசம் தனிநாடாகும் வரையில் கனன்றுகொண்டேயிருந்தது. வங்கமொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய் மொழி தினமாக 1999இல் யுனெஸ்கோ அறிவித்தது. 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாள் பங்களாதேஷில் ஒரு பொது விடுமுறை தினமாகும்.

இந்தியாவில் மொழிகள்

இந்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் பேச்சு வழக்கில் 121 மொழிகளும், 270 தாய்மொழிகளும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அகில இந்திய அளவில் ஒரு மொழியைப் பேசும் 10,000 மக்களை பிரித்து பார்ப்பதன் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட மொத்த மொழிகள் குறித்த பட்டியலின் அடிப்படையில் நாட்டிலுள்ள 96.71 விழுக்காட்டு மக்கள் ஏதேனும் ஒரு வரையறை செய்யப்பட்ட மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளனர். ஏறக்குறைய 3.29 விழுக்காட்டு மக்கள் மட்டுமே வரையறை செய்யப்படாத மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசுவது, 121 மொழிகள் என வரையறுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்தியாவின் மொழிகள் குறித்த 2012ன் அறிக்கை கூறுகிறது. 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும் போது 220 மொழிகள் 50 ஆண்டுகளில் அழிவைச் சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில் இந்தி பேசுகிற மக்கள் தொகை 14 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் அடையாளத்தை பன்முகத்தன்மையால்தான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, ஒற்றை அடையாளத்தால் வளர்த்தெடுக்க முடியாது, என்பதை அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும்

தமிழ் மொழியின் நிலை

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மரபுடையது தமிழ் மொழி. இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. கிரேக்க மொழிக்கு இந்த சிறப்பு உண்டு, ஆனால் தொன்மையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை இன்றைக்கு அவர்களால் எளிதாக கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. நமக்கோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை பள்ளியில் கற்றுத் தருகின்றனர்.

திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. சீன மொழியான மாண்டரின், அரபு மொழி என தொன்மையான மொழிகள் எதனை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய தொடர்ச்சி அறுந்து போயிருக்கின்றது. வடமொழியினை எடுத்துக் கொண்டால் அது வாழும் மொழியாக இல்லை. எபிரேய மொழியினை புதுப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அதன் தொன்மையை மீண்டும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது. தமிழ் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது," என்பார் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி. தமிழ் மொழியின் மேன்மை அதன் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் இருக்கின்றது.

நம் தாய்மொழிப் போராட்டங்கள்

வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ஆம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றது மறக்கமுடியாதது. சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவிவகித்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை 1938 ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து திராவிடத் தலைவரான தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இந்த ஆணைக்கு எதிராகவும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். 1939-ல் இந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடராஜன், தாளமுத்து ஆகிய இருவர் உயிரை இழந்தனர். பலர், தாக்குதலுக்குள்ளாகினர். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதன்பின் 1965ல் இந்தி திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதே ஆண்டு தமிழ் நாட்டில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதேபோல், மயிலாடுதுறை கல்லூரி மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை நாம் மறந்திடல் கூடாது.

இலங்கையின் மொழி பிரச்சனை

கால் நூற்றாண்டுகாலமாக தெற்காசியாவையே பதற்றப்பட வைத்த ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதி மூலமாக இருந்ததும் மொழி பிரச்சினைதான். 1965ஆம் ஆண்டு சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை எதிர்த்து தந்தை செல்வா தொடங்கிய போராட்டமே பின்னர் ஆயுத புரட்சியாக பரிணாமம் பெற்று வங்காள விரிகுடாவை செங்கடலாக மாற்றியது. "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனக்கூறி போராடி தம் உயிரை மாய்த்துக்கொண்டவர் பலர்.

மொழித்திணிப்பின் மூலம் கலாச்சார போராக தொடங்கி ஆயுதப்போராக பரிணமித்த போர்கள் ஏராளம். உலகில் நடைபெற்ற பல போர்களுக்கு காரணமாக இருந்ததும் மொழிதான். ஒரு மொழியை மற்றொருவர் மீது திணிக்க முயல்வதும் திணிப்புக்கு உள்ளாவோர் அதை தடுக்க முயல்வதும், அதற்காக போரிடுவதும், இரத்தம் சிந்துவதும் என மொழியினால் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட உலக வரலாற்றின் வரிகள் ஏராளம்.

நாம் என்ன செய்யவேண்டும்?

எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருக்கும் தாயிடம் இருந்து தொடங்கும் மொழி, தாய்மொழி. மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம்.

தாய் மொழியே பயிற்று மொழி, தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2024, 10:53