தேடுதல்

காசா பகுதியின் போர் காசா பகுதியின் போர்  (AFP or licensors)

நன்னெறிக் கொள்கைகளுடன் நிதி நிறுவனங்கள் செயல்பட

உக்ரைன் மற்றும் மத்தியக்கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர்களால் உலக அளவில் பாதுகாப்பிற்கான செலவு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகுக்கும் மனிதர்களுக்கும் பயன்படும்விதமாக நன்னெறிக் கொள்கைகளுடன் நிதி ஆதாரங்கள் செலவிடப்பட வேண்டும் என்ற அழைப்புடன் ஒழுக்கரீதி மதிப்பீடுகளுடன் உருவாக்கப்பட்ட வங்கிகளின் 3 நாள் கூட்டம் நிறைவுக்கு வந்தது.

நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வங்கிகளின் உலக கூட்டமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 70 வங்கிகள் வட இத்தாலியில் ஆய்வு கூட்டமொன்றை நடத்தி, ஆயுதங்களில் செய்யப்படும் முதலீடே போர் கொழுந்துவிட்டு எரிய காரணமாகிறது என தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு உலகின் அரசுகள் இராணுவ துருப்புகளுக்கும் ஆயுதங்களுக்கும் என செலவிட்ட தொகையின் பாதியைக் கொண்டு உலகின் அனைத்து மக்களுக்கும் அடிப்படை நல ஆதரவுத் திட்டங்களையும், பசுமை வாயுக்கள் குறைப்புத் திட்டத்தையும் செயல்படுத்தியிருக்க முடியும் எனக் கூறுகின்றன இந்த நன்னெறி வங்கிகளின் கூட்டமைப்பு.

பிப்ரவரி 29ஆம் தேதி, வியாழனன்று வட இத்தாலியில் நிறைவடைந்த இந்த வங்கிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதி குறித்தும், செயற்கை நுண்ணறிவு குறித்தும் விவாதிக்கப்பட்டன.

உக்ரைன் மற்றும் மத்தியக்கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர்களால் உலக அளவில் பாதுகாப்பிற்கான செலவீனம் 9 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறும் இந்த வங்கிகள் கூட்டமைப்பு, இதனால் பெருமளவில் பயனடைவது ஆயுத உற்பத்தியாளர்களே எனவும் தெரிவிக்கிறது.

ஆயுதக்குறைப்பை நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பங்கள் இடம்பெற்றுவரும் இன்றைய காலக்கட்டத்தில், உக்ரைன் மற்றும் மத்தியக்கிழக்குப் போர்களால் உலகின் ஆயுத முதலீடுகள் 9 விழுக்காடு அதிகரித்து, 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது எனக் கூறும் இந்த கூட்டமைப்பு, உலக வரவு- செலவுத் திட்டத்தில், 22 விழுக்காடு ஆயுதங்களுக்கு எனவே செலவளிக்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கிறது.

ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முதலீடுச் செய்வதை நன்னெறி நிதி நிறுவனங்கள் ஊக்குவிக்கக் கூடாது என கேட்கும் இந்த அமைப்பு, ஆயுதங்களில் முதலீடுச் செய்வதை ஊக்குவிப்பது போருக்கு ஊக்கமளிப்பதாகும் எனவும் எடுத்துரைக்கிறது.

நன்னெறியை அடிப்படையாகக் கொண்ட வங்கிகளின் கடமை என்பது, வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், சமுக பொருளாதாரத்திற்கும் பணியாற்றி, இவ்வுலகையும் உலகின் மக்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் எனவும் அண்மையில் நிறைவுற்ற வங்கிகளின் மூன்று நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2024, 15:49