தேடுதல்

சோமாலியா மக்கள் சோமாலியா மக்கள் 

காலரா நோயினால் சோமாலியாவில் 54 சிறார் இறப்பு

சோமாலியாவின் நலவாழ்வு மற்றும் மனித சேவைகள் துறையின் அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட 4,388 நோய்த் தொற்றுப்பதிவுகளில்ல் 59 விழுக்காட்டினர் அதாவது 2,605 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சோமாலியாவில் 54 சிறார் காலராநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்றும், இந்த தொற்றுநோயின் தீவிரத்தைத் தடுக்க உள்ளூர் அரசு மற்றும் நலவாழ்வு நிறுவனங்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண அழைப்புவிடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது Save the Children அமைப்பு.

மார்ச் 23 சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சோமாலியாவில் கடந்த வாரத்தில் இறந்த ஒன்பது பேர் உட்பட, ஏறக்குறைய 54 பேர் இவ்வாண்டு இறந்துள்ளனர் என்றும், ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறார்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் எதிர்காலத்திற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் Save the Children எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு.

சோமாலியாவின் நலவாழ்வு மற்றும் மனித சேவைகள் துறையின் அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட 4,388 தொற்றுநோய்ப் பதிவுகளில் 59 விழுக்காட்டினர் அதாவது 2,605 பேர்  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் தென் மாநிலங்களான பனாதிர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் காலரா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 23 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 586 புதிய நோயாளிகளில் 5 வயதுக்குட்பட்ட 331 குழந்தைகள் உள்ளனர் என்றும் உறுதி செய்துள்ளது.

சோமாலியாவில் உள்ள நலவாழ்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 2024 இல் தொடங்கிய தற்போதைய நோய் அதிகரிப்பானது கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளத்தின் விளைவு என்றும், பனாதிர் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.

அசுத்தமான நீர், கழிவுநீர் சுத்திகரிப்பு இன்மை, வெள்ளம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் இல்லாத பகுதிகள் போன்றவற்றினால் காலரா  நோய் வேகமாகப் பரவுகின்றது என்றும், இந்தத் தொற்றுநோயின் தீவிரத்தைத் தடுக்க உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது Save the Children அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2024, 15:00