தேடுதல்

உக்ரைன் குழந்தைகள் உக்ரைன் குழந்தைகள்   (Andrii Gorb)

கடந்த 2 ஆண்டுகளில் உக்ரைனில் 600 குழந்தைகள் உயிரிழப்பு!

உக்ரைனில் மோதல் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அரசுகள் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது : Willy Bergogné

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைனில் நிகழ்ந்து வரும் போரில் ஏறக்குறைய 600 குழந்தைகள் இறந்துள்ளனர், என்றும் அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாதுகாப்புத் தேடுபவர்களுக்கு ஓர் ஆண்டிற்கான தற்காலிகப் பாதுகாப்பு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

உக்ரைனில் போர் முடிவடையும் என்று கணிக்க முடியாததாலும், பாதுகாப்பான மற்றும் நிலையான வருவாய் பலருக்கு சாத்தியமில்லாததாலும், 2025-ஆம் ஆண்டிற்கு மேல், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை உறுதியச்செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது அவ்வமைப்பு.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பாவிற்கான Save the Children அமைப்பின் இயக்குநரும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் பிரதிநிதியுமான Willy Bergogné அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்காலிகப் பாதுகாப்பு உக்ரைனில் போரிலிருந்து பாதுகாப்பு தேடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிர்நாடியாக உள்ளது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில், 592 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் மோதல் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அரசுகள்  குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்றும் உரைத்துள்ளார் Bergogné

போரின் பயங்கரங்களில் இருந்து தப்பிய குழந்தைகளை உக்ரைனுக்குத் திருப்பி அனுப்புவது நினைத்துப் பார்க்க முடியாதது என்றும், அவர்களை மீண்டும் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத துயரங்களுக்குள் தள்ளிவிட நினைப்பது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார் Bergogné.

இதுகுறித்து ஐரோப்பிய அரசுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நீண்டகால திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும், ஏனெனில், இது பாதிக்கப்படக்கூடிய சிறுமிகள் மற்றும் சிறுவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் மற்றும் அவர்களின் நாட்டின் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உறுதியை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் Bergogné.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2024, 14:29