உடல் மற்றும் உளவியல் விளைவுகளுக்கு ஆளாகும் குழந்தைகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சிரியாவில் நடைபெற்று வரும் போர் மற்றும் மோதலினால் வன்முறை, இடப்பெயர்தல், பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடி, தீவிர பற்றாக்குறை, நோய்த்தொற்றுகள் போன்றவைகளும், நிலஅதிர்வுகளினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நீண்ட கால உடல் மற்றும் உளவியல் விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் அமைப்பு.
மார்ச் 18 திங்கள் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 34விழுக்காடு பெண் குழந்தைகளும் 31 விழுக்காடு ஆண் குழந்தைகளும் உளவியல் ரீதியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பதிவு செய்துள்ளது.
13 ஆண்டுகளாக நடந்து வரும் போர் மற்றும் மோதல்களால் சிரியா நாட்டில் ஏறக்குறைய 75 இலட்சம் குழந்தைகள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட 6,50,000க்கும் அதிகமான குழந்தைகள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
55 இலட்சம் பள்ளி வயதுக் குழந்தைகளில் ஏறக்குறைய பாதிபேர் அதாவது, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட 24 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச்செல்ல இயலாத நிலையில் உள்ளனர் என்றும், 13 இலட்சத்திற்கும் அதிகமான சிரியா மக்கள் நாட்டிற்குள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர், ஐந்து வயதிற்குட்பட்ட 6,50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2019 ஆம் ஆண்டைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 1,50,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகளின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் வருத்தம் விளைவிக்கக்கூடிய சோகங்கள் ஏற்படுகின்றன என்றும், இது அவர்களின் கற்றல் திறன், உற்பத்தித்திறன் மற்றும் எதிர்கால வருமானத்தையும் பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட அண்மைய கணக்கெடுப்பின்படி, 34விழுக்காடு பெண்கள் மற்றும் 31 விழுக்காடு சிறார் உளவியல் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான உளவியல் துயரத்தை சந்தித்த குழந்தைகளின் விழுக்காடு இதைவிட இன்னும் அதிகமாக உள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்