தேடுதல்

மினோவா பகுதியில் சிறார் மினோவா பகுதியில் சிறார்  (AFP or licensors)

மினோவா பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் நான்கு சிறார் காயம்

வடக்கு கீவில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்த 95,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள்

மெரினா ராஜ் - வத்திக்கான்  

பள்ளியிலிருந்து பல குழந்தைகள் வீடு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் நான்கு அப்பாவி குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் புதிய வருகையின் காரணமாக மினோவா நகரம் பதற்றத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் காங்கோ ஜனநாயகக் குடியரசின் UNICEF துணைப் பிரதிநிதி காத்யா மரினோ.

மார்ச் 23 சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள மரினோ அவர்கள், வடக்கு கீவில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்த 95,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் மினோவா பகுதிக்கு  புலம்பெயர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

மார்ச் 20 கடந்த புதன்கிழமை நடந்த இச்சம்பவமானது, தெற்கு கீவு பகுதியிலும் மோதல் பரவுவதை எடுத்துக்காட்டுகிறது என்றும், மினோவா பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் அளவிற்கு கடுமையாகக் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், UNICEF உள்ளூர் மக்களின் உதவியுடன், புதிதாக இடம்பெயர்ந்த 8,300 குடும்பங்களுக்கு மினோவாவில் அடிப்படை வீட்டுப் பொருட்களை விநியோகித்துள்ளனர் என்றும், சாலை வழியாகவும் கடல் வழியாகவும் மனிதாபிமான உதவிப்பொருள்களோடு இப்பகுதியை அணுகுவது கடினமாகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் மரினோ.

மினோவாவில், UNICEF 2023 ஆம் ஆண்டு முதல், மோதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீர் மற்றும் நலவாழ்வு உதவிகள் உட்பட பல அடிப்படைச் சேவைகளை வழங்கி வருகின்றது என்றும், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க சமூகம் சார்ந்த வலையமைப்புக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமான வன்முறை மீண்டும் எழுகிறது என்றும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வடக்கு கீவுவில் குறைந்தது 4,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் இச்சூழல் குழந்தைகளை மேலும் வன்முறைக்கு ஆளாக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மரினோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2024, 15:05