தேடுதல்

ஏமனில் போர் பாதிப்புகள் ஏமனில் போர் பாதிப்புகள்   (ANSA)

ஏமனில் 1 கோடி குழந்தைகளுக்கு உயிர்காக்கும் உதவி தேவை!

ஏமனில் 2015-இல் மோதல் தொடங்கியதிலிருந்து, 11,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 7,600 பேர் ஊனமுற்றுள்ளனர் : யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏமனில் நிகழ்ந்து வரும் கடந்த 9 ஆண்டுகால போரில், 11,500-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 27 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மார்ச் 27, இப்புதனன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் இந்தத் தகவலை வழங்கியுள்ள யுனிசெஃப்  நிறுவனம், ஏமனில் நிலையான அரசியல் தீர்வு இல்லாததால், மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அதாவது, ஒரு கோடியே 82 இலட்சம் மக்களுக்கும், 98 இலட்சம் குழந்தைகளுக்கும் இன்னும் உயிர்காக்கும் உதவி தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், பல ஆண்டுகளாக நீடித்த மோதல்கள், உடைந்த பொருளாதாரம், தோல்வியுற்ற சமூக ஆதரவு அமைப்பு ஆகியவை, ஏமனில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் வாழ்க்கையில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏராளமான குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து உட்பட அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து இழந்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள Russell அவர்கள், இத்தருணத்தில், குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கவனிப்பை வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்தச் சூழல், எதிர்வரும் தலைமுறைகளை அச்சுறுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஏமனில் 2024-ஆம் ஆண்டிற்குள், யுனிசெஃப் நிறுவனம் 5,00,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான சிகிச்சையுடன் அடைய இலக்கு வைத்துள்ளது என்றும், இது ஐந்து வயதுக்குட்பட்ட இறப்புகளைக் குறைக்க உதவும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும் உரைத்துள்ளார் Russell.

மனிதாபிமான நெருக்கடிக்குப் பதிலளிப்பதற்கும் ஊட்டச்சத்து, நலவாழ்வு, தண்ணீர், உடல்நலம், கல்வி மற்றும் பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட மனிதாபிமான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கும் யுனிசெஃப் நிறுவனத்திற்கு 2024- ஆண்டில் 14 கோடியே 20 இலட்சம் US டாலர் பணம் தேவைப்படுகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் போர்நிறுத்த சூழல்கள் இருந்தபோதிலும், நாட்டின் பல பகுதிகளிலும் தொடரும் இடைவிடாத  மோதல்கள் மற்றும் கண்ணிவெடிகளில் சிக்கி குழந்தைகள் பெருமளவில் பலியாகி வருகின்றனர் என்றும் 2015-ஆம் ஆண்டில் மோதல் தொடங்கியதிலிருந்து, 11,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 7,600 பேர் ஊனமுற்றுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 14:17