வாரம் ஓர் அலசல் - சுற்றுச்சூழல் நெருக்கடியும் ஊடகவியல் துறையும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மக்களாட்சியை தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்குகிறது பத்திரிகைத்துறை, அதாவது சமூக ஊடகவியல்துறை. நாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் என்பவைகளுக்கு இணையாக நின்று மக்களாட்சியை தாங்கி நிற்கும் இந்த சமூக ஊடகவியல் துறை, உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை நெறி தவறாமல் மக்களுக்கு வழங்கும் துறையாகும்.
கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலையை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. யுனெஸ்கோ பொது மாநாடு 1991ல் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டாடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உலக பத்திரிகை சுதந்திர தினம் என்ற யோசனையை முன்மொழிந்தது. இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை நினைவூட்டவும், தங்கள் கடமைகளைச் செய்யும்போது உயிரிழக்கும் ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கவும், பொதுமக்களுக்குத் தகவல்களைப் பரப்பும் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்காக வாதிடவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், உலக பத்திரிகை சுதந்திர தினம், தணிக்கை, துன்புறுத்தல், மிரட்டல், வன்முறை உட்பட உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் மற்றும் அச்சுறுத்தல் குறித்து கவனத்தை ஈர்க்கும் ஒரு வாய்ப்பாகும்.
இந்த ஆண்டு 31வது உலக ஊடகவியலாளர் சுதந்திர தினத்தின் சிறப்புக் கொண்டாட்டமாக, கருத்தரங்கு ஒன்று மே மாதம் 2 முதல் 4 வரை UNESCO நிறுவனத்தின் முயற்சியால் சிலே நாட்டின் தலைநகர் சந்தியாகோவில் இடம்பெறுகிறது. ‘உலக சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் மத்தியில் ஊடகவியல் துறை’ என்ற இவ்வாண்டிற்கான உலக ஊடகவியல் சுதந்திர நாளுக்கான தலைப்பு குறித்து இந்த கருத்தரங்கு விவாதிக்கும்.
ஊடகவியல் பணியாளர்களுக்கு உலகம் முழுவதும் எத்தனை பாதுகாப்பு இருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியே. இந்தியாவிலும் பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதும், கொலைச் செய்யப்படுவதும் தொடரத்தான் செய்கிறது. 2000மாம் ஆண்டிற்கும் 2022 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,787 ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட ஆண்டுகளாக 2012ஐயும் 2013ஐயும் குறிப்பிடலாம். 2012ல் 144 ஊடகவியலாளர்களும் 2013ல் 142பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2002க்கும் 2022க்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 80 விழுக்காட்டினர் 15 நாடுகளை மட்டும் சேர்ந்தவர்கள். அதிக எண்ணிக்கையில் இருந்தது ஈராக்கும் சிரியாவும் என்று சொன்னால் மிகையில்லை. ஆனால், தற்போதோ, ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்படும் நாடாக, காசா பகுதி உள்ளது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தன் வேலை முடிந்து பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் வீட்டை திறக்கும்போது, உள்ளூர் நேரம் மாலை 8 மணியளவில் மூன்று பேரால் குறைந்தபட்சம் ஏழுமுறை சுடப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் குறித்து உலகுக்கே தெரியும்.
அன்புள்ளங்களே, உலக நிகழ்வுகளை நெறி தவறாமல் மக்களுக்கு வழங்கும் ஊடகவியலாளர்களின் தினத்தைச் சிறப்பிக்க உள்ள இவ்வேளையில், வாழ்வின் உயர்ந்த நெறி முறைகளின் முக்கியத்துவம் குறித்து விவிலியப் பின்னணியில் திருச்சி திரு அ. அல்போன்ஸ் அவர்களின் கருத்துக்களை தன் குரலில் வழங்க வருகிறார் சென்னை திருமதி ஃப்ளோரா சார்லஸ். இவ்வுரையின் ஒருங்கிணப்பு அன்பின் மடல் நவா.
வானமாகலாம் வாங்க!
வாழ்வின் உயர்ந்த நெறிமுறைகளைக் கூறும் நற்செய்திகள் அதோடு நின்றுவிடவில்லை. அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டியும், புரிந்து கொண்டதை நம் வாழ்வில் நடை முறைபடுத்தவும் கிறிஸ்துவின் வாழ்க்கை சம்பவங்களின் வாயிலாகக் காட்டுவதுதான் நற்செய்திகளின் விசேஷமாகும். முடிவில்லா வாழ்வு ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதுதான் நற்செய்திகளின் நோக்கம். யோவான் தனது நற்செய்தியில் காட்டுகிறார். இயேசு யூத அறிஞரிடம் மறுபடி “பிறந்தாலொழிய விண்ணரசை அடைய முடியாது என்று கூறுகின்றர். கிறிஸ்துவின் விளக்கத்தை யூத அறிஞராலேயே எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இதே கருத்தை லூக்கா தனது நற்செய்தியில் உவமையாக விளக்குகின்றார். தந்தையோடு வாழ்ந்த இளைய மகன் செல்வத்தைப் பங்கு பிரித்து ஊதாரியாக வாழ்ந்து, இறுதியில் மனம் வருந்தித் தந்தையை வந்தடைகின்றான். அப்பொழுது தந்தை, “விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் இறந்து போயிருந்த என் மகன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான்” என்று கூறுகின்றார். இளைய மகன் எங்கே இறந்து போனான்?
மறுபடி பிறப்பு என்பது இழந்த தனது உண்மை நிலையை அடைதலாகும். அதில் தான் ஆனந்தம் உள்ளது. முதல் பிறப்பிலே மகிழ முடியாது. அதில் விழிப்புணர்வு இல்லை. முதல் நிலை அதாவது பழமை மறந்து புதுமை உயிர்பெற வேண்டும்.' பழைய மனிதன் இறந்து புதிய மனிதன் பிறக்க வேண்டும். புதிய நிலையில் தான் ஆனந்தம் நிலவும். மறுபடி பிறக்கும் பொழுதுதான் புதுவாழ்வு தொடங்கும். தன்னுயிரை இழந்தாலொழிய தன் உயிரைக் கண்டடைய மாட்டான் என்று இதைத்தான் இயேசு கூறுகின்றார்.
யோவான், கிறிஸ்து- நிக்கதேம் இருவரின் உரையாடலில் கூறிய கருத்துக்கு லூக்காவின் உவமை நிழல் உருவம் தருகின்றது. மாற்குவோ நிஜமாகக் காட்டுகின்றார்.
இயேசு பெத்சாயிதா குருடனின் விழிகளில் உமிழ்ந்து ஏதாவது தெரிகின்றதா என்று கேட்கும்பொழுது, குருடனோ மக்களைப் பார்க்கின்றேன், மரங்கள் போலிருக்கின்றனர் ஆனால் நடக்கின்றனர் என்றான். இயேசு மீண்டும் அவன்மீது தம் கைகளை வைக்கவே அவன் பார்வை பெற்று தெளிவாகக் காணலானான். இங்கே குருடன் முதலில் பார்க்கின்றபொழுது மக்கள் மரங்களாகத் தெரிந்தனர். மறுமுறை பார்க்கின்றபொழுது உண்மை நிலை புரிகின்றது.
(இயேசு) வழியாகத்தான் உலகம் உண்டானது. ஆனால் உலகமோ அவரைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த உலகிலேயே வாழ்ந்தும் உண்மையை, கிறிஸ்துவை புரிந்து கொள்ளமுடியவில்லை. மறுபடி பிறக்கின்றபொழுது தான் முடிவில்லா வாழ்வை, உண்மை நிலையை உணர்கின்றோம். மறுபடி பிறக்க வேண்டும் என்பதை யோவான் உரையாடலில் உரைக்க, லூக்கா நிழலாக உவமையாகக் காட்ட, மாற்குவோ நிஜமாக்கி நிறுத்த மத்தேயுவோ சரித்திரமாகக் காட்டுகின்றார்.
ஞானியர்கள் ஏரோது அரசனிடம் வந்து, “யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே அவர் எங்கே? அவருடைய விண்மீன் எழுதலை கண்டு அவரை வணங்க வந்தோம்” என்றார்கள். இங்கே ஞானியர்கள் விண்மீனை முதன் முதலில் கண்ட காட்சியைக் கூறவில்லை. விண்மீனைக் கண்ட ஞானியர் நிலையையும் கூறப்படவில்லை. ஆனால் ஏரோதுவிடமிருந்து வெளியேறிய ஞானியர் மீண்டும் விண்மீனைக் காணுகின்றனர். அதன் வழி நடக்கின்றனர். இயேசுவை தரிசிக்கின்றனர். இந்த இடத்திலே மத்தேயு மிகக் கவனமாகக் கூறுவார். விண்மீனைக் கண்டதும் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுற்றனர்.
ஞானியர் முதலில் விண்மீனைக் கண்டபொழுது அதைப் பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை. இரண்டாம் முறை அல்லது மறுமுறை அவர்கள் காணும்பொழுது அளவில்லா ஆனந்தம் அடைவதைக் காணலாம். முதன் முதலில் தொடங்கிய பயணம் ஏரோதில் முடிகின்றது. மறுமுறை தொடங்குவது கிறிஸ்துவில் முடிகின்றது. மறுபடி பிறந்தாலொழிய என்பதை நிகழ்ச்சிகளின் வழியாக மத்தேயு வடித்துக் கொடுப்பதை பார்க்கின்றோம்.
விதையாய் அழிந்து மரமாய் உருவெடுப்போம். பழமையை மறந்து, இறந்து புதிய, விடியலை காண்போம். “நான்” என்பது இறந்து “கிறிஸ்துவாக மலருவோம்” “மேகமா”ன நிலையை இழந்து வானமாகலாம்.'' புதிய வாழ்வாகலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்