மனிதாபிமான சட்ட மீறுதல் "கண்ணிவெடிகளைப் பயன்படுத்துதல்”
மெரினா ராஜ் – வத்திக்கான்
"கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மீறுவது என்றும், மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பொதுமக்கள்,குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதைக் கருத்தில்கொண்டு ஆயுதப் பயன்பாட்டை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார் யுனிசெஃப் இயக்குனர் டெபோரா கோமினி.
கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் மீட்பு உதவி தினமாகிய ஏப்ரல் 4 வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு அமைப்பின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான மண்டல இயக்குனர் தெபோரா கோமினி.
சுரங்கங்கள் மற்றும் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றும் இதில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.
2023 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்களால் ஏற்பட்ட துயரமான நிகழ்வுகளால், ஏறக்குறைய 1,052 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 390 நிகழ்வுகளில் ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம் என்றும் யுனிசெஃப் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மியான்மாரில், அதிகரித்து வரும் மோதலின் விளைவாக 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 1கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
அண்மைய மாதங்களில் மியான்மாரில் மோதல்கள் அதிகரித்து வருவதால், தலைநகர் நய்பிடாவ் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களும் பகுதிகளும் கண்ணிவெடிகளால் மாசுபட்டுள்ளன என்றும், உலகிலேயே கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்துகளால் அதிகம் மாசுபட்ட நாடுகளில் மியான்மர் இப்போது உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கண்ணிவெடிகளை அடையாளம் காணும் வாய்ப்பு குறைவு என்பதால் அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆயுத விநியோகத்தால், குழந்தைகள் தங்கள் வீடுகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், விவசாயப் பகுதிகள் உட்பட எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்