வாரம் ஓர் அலசல் - தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தாய்மையைப் போற்றுவோம். தாயைப் போன்ற ஓர் அருமையான கோவிலை உலகில் வேறு எங்குமே காண முடியாது. தாயிற் சிறந்த கோவில் இல்லை. பலருக்கு தாய்தான் தெய்வமும் கூட. தட்ட வேண்டிய நேரத்தில் தட்டியும், தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்தும், தழுவ வேண்டிய நேரத்தில் தழுவுவதும் தாய்மைக்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒவ்வொரு பெண்ணின் வாழ்வைப் பூர்த்தியடையச் செய்கிறது தாய்மை. நாம் தோல்வி அடையும்போது நமக்கு தன்னம்பிக்கை கொடுப்பது தாய்தானே. எப்போதும் பிள்ளைகளுக்குப் பக்கபலமாக நிற்பவரும் தாய்தான். தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து அகமகிழ்ந்து அதை தன் வளர்ச்சியாக நோக்குபவரும் தாய்தான். தன் பிள்ளையின் முகம் பார்த்தே அதன் மனநிலையைத் தெரிந்து கொள்வாள். தான் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை சிரமப்படக் கூடாது என்று நினைப்பதுதான் தாயுள்ளம். குழந்தைகள் தான் அவள் உலகம், வாழ்க்கை எல்லாமே. நம் வளர்ச்சிக்கு வித்திடுபவரும் தாய். தாய்மை அழகானது, அன்பு, அரவணைப்பு, அக்கறை மிகுந்தது. அர்ப்பணிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருபவரும் அவர்தான். கருவறையில் இருந்து கல்லறை வரை, தன் குழந்தையைப் பொறுத்தவரையில் கடவுளாகவே நின்று செயல்படுகின்றார் தாய். தங்கை, தமக்கை, தாரம், மகள் என்று எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காத பேரின்பம் தாய் என்று அழைத்ததும் கிட்டுகிறதே அதுதான் மாமந்திரம். மென்மை, அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு என அனைத்தையும் ஒரே நபரில் ஒரு குழந்தையால் உணரமுடியும் எனில் அது தாயிடம்தான். தாயைப்பற்றியே கூறிக்கொண்டு இருக்கிறோமே என்ன காரணம் என கேட்கிறீர்களா?
ஏப்ரல் 11ஆம் தேதி தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் இந்தியாவில் சிறப்பிக்கப்படுகின்றது. தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் முக்கிய நோக்கம், தாய்வழி ஆரோக்கியத்தின் முக்கிய பங்கு மற்றும் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு முறையான மருத்துவ கவனிப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். தாய்மார்கள் மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க அரசு மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது. மகப்பேறு தொடர்பான தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஏராளமான பெண்கள் இறக்கும் நிலையில், மகப்பேறு இறப்பு இந்தியாவில் குறிப்பிடத்தக்க பிரச்சனையாகத் தொடர்கிறது. தேசிய பாதுகாப்பான தாய்மை தினம், தாய்க்கு உயர்தர நலச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துகிறது, மற்றும், மகப்பேறு கால இறப்புக்கு பங்களிக்கும் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார காரணிகளை நிவர்த்தி செய்கிறது.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் என்பது ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் என்ற அமைப்பின் இந்திய கிளையின் முன்முயற்சியாகும். WRAI எனப்படும் இந்த கிளையின் வேண்டுகோளின்படி, 2003இல், இந்திய அரசு ஏப்ரல் 11 ஆம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்தது. இது மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் பிறந்த நாளாகும். மகாத்மா காந்தியின் அனைத்து முயற்சிகளிலும் கஸ்தூர்பா காந்தி ஒரு நிலையான துணையாக இருந்தார். இந்திய அரசு கஸ்தூர்பா காந்தியின் பிறந்தநாளைப் பயன்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான தாய்மை பற்றிய செய்தியை மக்களிடையே எடுத்துச் செல்லவும் முயல்கிறது. இதில் பெருமைப்படவேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை சமூக ரீதியாக அறிவித்த உலகின் முதல் நாடு இந்தியா.
இத்தகைய ஒரு நாளுக்கான தேவை என்னவென்று சிலர் கேட்கலாம். அண்மை புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1400 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பு தொடர்புடைய பிரச்சினைகளால் இறக்கின்றனர். மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், கர்ப்பகாலங்களில் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தலைத் தருகின்ற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
2020ஆம் ஆண்டில் மட்டும் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்புடய தடுக்கவல்ல காரணங்களால் ஒவ்வொரு நாளும் 800 பேர் இறந்துள்ளனர். மகப்பேறு காலத்தில் ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கு ஒரு தாயை இந்த உலகம் இழந்திருக்கிறது. மகப்பேறு காலத்தில் உயிரிழப்பது என்பது, மகப்பேறு காலம் முடிந்து 42 நாட்களுக்குள் இறந்துவிடும் நிலையை குறிப்பதாகும் என உலக சுகாதார அமைப்பின் வரையறை சொல்கிறது. 2000க்கும் 2020க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகளில் மகப்பேறு காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு குறைந்துள்ளபோதிலும் மேற்கூறிய எண்ணிக்கை இருக்கிறது என்றால், 2000க்கு முந்தைய நிலைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். மகப்பேறுகால உயிரிழப்புகளில் 95 விழுக்காடு ஏழை நாடுகளில்தான் இடம்பெறுகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் பேர் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்புடய காரணங்களால் உலகில் உயிரிழந்திருக்க, இந்தியாவின் நிலை குறித்தும் நாம் அறிந்திருப்பது நல்லது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் ஏறக்குறைய 23,800 மகப்பேறு கால மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது, அஸ்ஸாம், உத்திரபிரதேசம், உத்ரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கார் மாநிலங்களில் ஆகும். 1997க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் 13 இலட்சம் பெண்கள் மகப்பேறு காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் அதிமுக்கிய நோக்கம், பெண்களின் உரிமையை வலியுறுத்துவதாகும். அதாவது, ஒரு பெண்ணுக்கு தன் வாழ்வில் தான் செல்லவேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்க இருக்கும் உரிமையை அனைவரும் ஏற்க வைப்பதாகும். WRA எனப்படும் வெள்ளை ரிப்பன் அலையன்ஸ் என்ற அமைப்பு, இதற்காகத்தான் உழைக்கிறது. அதாவது, பெண்களின் நலன், உரிமை, மற்றும் பாலின சரிநிகர் சமநிலை ஆகியவற்றிற்காக உழைக்கிறது.
1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை ரிப்பன் அலையன்ஸ் அமைப்பு அனைத்துப் பெண்களும் தரமான நலவாழ்வுக்கு தங்களுக்கு இருக்கும் உரிமையைப் பெற உதவுகிறது. இதன் ஆயிரக்கணக்கான அங்கத்தினர்கள் 148 நாடுகளில் பணியாற்றுகின்றனர். 15 நாடுகளில் அரசுகளோடு இணைந்து அதிகாரப்பூர்வ கிளைகளைக் கொண்டுள்ளது. நாடுகளின் முயற்சிகளுக்கு, அதாவது பெண் உரிமைகளை போற்றும் நாடுகளின் முயற்சிகளுக்கு, குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, இந்தோனேசியா, பிஜி, ருவாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு கிளை அலுவலகம் அமைத்து செயல்பட உதவி வருகின்றது.
மனித உரிமைகளை மதிக்கும் அனைத்துலக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகப்பேறு கால நல ஆதரவுத் திட்டங்கள் பெண்களுக்கு வழங்கப்படவேண்டும் என உழைத்துவருகிறது இந்த அமைப்பு. கர்ப்பகாலத்திலும், மகப்பேறு காலத்திலும் அனைத்து தாய்மார்களின் உயிரும் காக்கப்பட வேண்டும் என உழைத்துவருகிறது இது.
ஏப்ரல் 11அன்று இந்தியாவில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முறையான மருத்துவ வசதிகளை வழங்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் முறையான சிகிச்சை பெற உரிமை உண்டு என்பதை இது வலியுறுத்துகிறது.
ஒரு தாய்க்கு இருக்கும் உரிமைகள் குறித்துப் பார்த்தோம். இப்போது கொஞ்சம் கடமைகள் குறித்து பார்த்துவிடுவது நல்லது. தேவைகள் அதிகமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் நாம் தள்ளப்பட்டுள்ளோம். குழந்தைகளின் நலனுக்காகத்தான் என்று நியாயம் கற்பித்துக்கொண்டே குழந்தையை பராமரிக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட நேரமில்லை, அல்லது அழகு குறைந்துவிடுமோ என்ற பயம் கூட சிலருக்கு உணடு. நாம் தெரிந்துகொள்ளவேண்டும்: தாய்ப்பால் குழந்தைக்கு முதல் உணர்வு, உணவு, தடுப்பு மருந்து, சத்து மருந்து என்று போற்றப்படுவது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்றுகள் வருவதில்லை. தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில்லை. குழந்தைக்கு தாடை எலும்புகள், பற்கள், நன்கு வளர தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அந்தச் சமயத்தில் தாய் கருத்தரிப்பதில்லை. இதை ஒரு தாற்காலிகக் கருத்தடை முறை என்றும் சொல்லலாம். தாய்ப்பால் குடிக்காத குழந்தை உரிமை மறுக்கப்பட்ட குழந்தை என்றும், ஏமாற்றப்பட்ட குழந்தை என்றும் சமூக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தாய்மை என்பதே தியாகத்தின் எல்லையாக, அன்பின் உயர்நிலையாக இருக்கும்போது, தங்கள் குழந்தைகளுக்காக ஆயிரமாயிரம் தியாகங்களை ஆற்றிவரும் தாய்மார்களை நன்றியுடன் நினைப்போம், தாய்மையைப் போற்றுவோம்.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்திலிருந்தாவது, பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க தோள்கொடுப்போம். இது ஒரு விழிப்புணர்வு தினம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்