குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான இடம் என்று எதுவும் இல்லை
மெரினா ராஜ் – வத்திக்கான்
போரின் தீவிரத்தால் உக்ரைன் நாடு முழுவதும் அதிகரித்து வரும் தாக்குதல்கள், தற்போது குழந்தைகளை நோக்கித் திரும்புகின்றன என்றும், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான இடம் என்று எதுவும் இல்லை என்றும் யுனிசெஃப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அதன் இயக்குனர் Regina De Dominicis.
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 14 வயதுக்குட்பட்ட மூன்று சிறார் கொல்லப்பட்டனர் என்றும், போர் தொடங்கி இரண்டாண்டுகளில் ஏறக்குறைய 1957க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இறந்த சிறாரின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் வெளிப்படுத்தி இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் Regina De Dominicis.
வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என குழந்தைகள் வாழும் அத்தனை பகுதிகளும் போர்த்தாக்குதலினால் சேதமடைந்துள்ளன என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உடனடி மனிதாபிமானச் சேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் உக்ரைன் நாடு முழுவதும் யுனிசெஃப் தீவிரமாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
உயிர்காக்கும் சேவைகள், உதவிகள் போன்றவற்றுடன் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு கிடைக்கும் வகையிலான செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன என்று எடுத்துரைத்துள்ள Dominicis அவர்கள், குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்கள் நம்பியிருக்கும் உள்கட்டமைப்பு எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உக்ரைன் குழந்தைகளுக்கு அமைதி தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்